நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு 
தமிழ்நாடு

கூட்டணிக்கு அழைக்கத்தான் விஜய் மீது வழக்கு தொடராமல் இருக்கிறார்கள்: சீமான் | Seeman |

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பதாகவும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

விஜயைக் கூட்டணிக்கு அழைக்க வேண்டும் என்றுதான் அவர் மீது வழக்கு தொடராமல் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

“வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் என்பதை நான் எதிர்க்கிறேன். வட இந்திய உழைப்பாளர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலை கொடுங்கள், அடிப்படை வசதியைக் கொடுங்கள். ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை தரக்கூடாது. இதுவே எங்கள் நிலைப்பாடு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு உள்ள வாக்குரிமையை நீக்குவோம். தமிழ்நாட்டில் வேலை செய்யுங்கள். ஆனால் உங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று வாக்களியுங்கள் என்று சொல்லிவிடுவோம். ஏனென்றால் தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை. ஆனால் இங்குள்ள இந்தி பேசுபவர்கள் மொழியால் ஒன்றிணைந்து விடுவார்கள். அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்தால், தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலமாக மாற்றப்படும். அதனால் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்.

பிப்ரவரி 7 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சியில் மாநாடு நடத்தப்படவுள்ளது. அப்போது வேட்பாளர்களை அறிவிப்போம்.

கரூர் சம்பவம் குறித்த வழக்கு சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. அதற்குள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழைத்து விஜய் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார் என்றால், விசாரணையில் அந்தக் குடும்பத்தினர் எத்தகைய பதில்களைச் சொல்வார்கள்? விஜயைப் பார்க்க வந்த கூட்டத்தில் தானே நெரிசல் ஏற்பட்டது. ஆனால் சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கையில் ஏன் விஜய் பெயர் சேர்க்கப்படவில்லை? ஆதவ் அர்ஜுனாவின் பெயரும் இல்லையே. காவல்துறை முறையாகப் பாதுகாப்பு வழங்கவில்லை என்றால், பிரசார வாகனத்தின் மீது ஏறியதும் காவல்துறைக்கு நன்றி கூறியது ஏன்? குற்றத்திற்குக் காரணம் ஆனவர் மீது வழக்கு தொடரப்படாத விசாரணை எப்படி இருக்கும்?

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மீது வழக்கு தொடரப்பட்டவுடன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டார். ஆனால், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டவுடன் முன்ஜாமின் மனுவைத் திரும்பப் பெறுகிறார். அப்போது சிபிஐ விசாரிக்கிறதா? பாதுகாக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. விஜய், ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு தொடரப்படாதது கூட்டணிக்கு அழைப்பதற்காகத்தான். கூட்டணி அவர்கள் வரவில்லை என்றால் மீண்டும் வழக்கு தொடர்வார்கள்” என்றார்.

NTK coordinator Seeman stated that case is not filed against Vijay only because they want to invite him to the alliance.