தமிழ்நாடு

அதிமுகவுடன் கூட்டணி இல்லை: எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் திட்டவட்டம்!

அதிமுக மட்டுமல்ல, எந்த ஒரு அரசியல் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும், அந்த கூட்டணியில் எஸ்டிபிஐ இருக்காது

ராம் அப்பண்ணசாமி

அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ அங்கம் வகிக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது எஸ்டிபிஐ கட்சி. அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை பா.மு. முபாரக், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சிபிஎம் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்திடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், சென்னையில் நேற்று (ஏப்.18) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் கூறியதாவது,

`அதிமுகவுக்குப் பாஜகவுக்கு எவ்வளவு நிர்பந்தம் கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது வெட்ட வெளிச்சமானது. அதிமுகவைப் பாஜக கபளிகரம் செய்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைக்கும் அரசியல் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம். அதிமுக மட்டுமல்ல, எந்த ஒரு அரசியல் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும், அந்த கூட்டணியில் எஸ்டிபிஐ இருக்காது.

தேர்தலுக்கு 8 முதல் 9 மாதங்கள் வரை உள்ளன. எங்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் விரிவாக ஆலோசனை செய்து எந்த கூட்டணியில் இருப்போம் என்பதை உங்களிடம் அறிவிப்போம்.

பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை எக்காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று கூறியிருந்தார். இப்போது வேறு வழியில்லாமல் கூட்டணி வைத்திருக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்த மாநில கட்சிகள் அழிந்துபோனதைப் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் தமிழ்நாடும் ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போவதாக கருதவேண்டியுள்ளது’ என்றார்.