பள்ளிகளில் 'U' வடிவில் மாணவர்கள் அமரவைக்கப்பட்டால், மாணவர்களின் கழுத்தும் கண்களும் பாதிக்கப்படும் என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளத்தில் அறிமுக இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் (Sthanarthi Sreekuttan). பள்ளிகளில் மாணவர்கள் வரிசைப்படி அமரவைக்கப்படும் முறையால், மாணவர்களிடையே உளவியல் ரீதியாக ஏற்படும் தாக்கம் குறித்து இப்படம் பேசியிருந்தது. அரைவட்ட அமர்வு முறையில் மாணவர்கள் அமரவைக்கப்பட்டிருக்கும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெற்றிருந்தது. மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியர்கள் அமரும் வகையில் இந்த அமைப்பு இருக்கிறது. முதல் வரிசை மாணவர்கள், கடைசி வரிசை மாணவர்கள் எனும் எண்ணத்தைப் போக்குவதே இதன் நோக்கமாக இருந்தது.
இந்தப் படத்தின் எதிரொலியாக கேரளத்தில் சில பள்ளிகளில், பள்ளி மாணவர்கள் இதே முறையில் அமரவைக்கப்பட்டு வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும் இந்த முறை தற்போது அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் 'U' வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை (Tamil Nadu School Education Department) அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவுறுத்தலுக்கு சமூக ஊடகப் பக்கங்களில் எதிர்ப்புகள் வரத் தொடங்கின. மாணவர்களின் கழுத்து மற்றும் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வல்லுநர்கள் அல்லது மருத்துவர்களின் கலந்தாலோசனை செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்நிலையில், பள்ளி மாணவர்கள் இந்த முறையில் அமரவைக்கப்படுவது பற்றி மருத்துவர் ஒருவருடைய சமூக ஊடகப் பதிவு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மருத்துவர் புரூனோ, தனது பதிவில் 'U' வடிவில் அமரவைக்கப்படவுள்ளதன் மூலம், மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும் சிரமங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
மருத்துவர் புரூனோ இதுபற்றி பதிவிட்டுள்ளதாவது:
"வாரத்திற்கு 5 நாள்கள், தினமும் 6 மணி நேரம் ஒரே பக்கமாகக் கழுத்தையும் தலையையும் திருப்பினால் கழுத்தில் உள்ள எலும்புகளும் தசைகளும் பாதிக்கப்படும். கண்ணாடி அணிந்த குழந்தைகள் கண்ணாடியின் ஒளி மையம் (லென்சின் ஆப்டிக் செண்டர்) வழியாகப் பார்க்காமல் பக்கவாட்டின் மூலம் பார்ப்பதால் கண்ணின் நெருக்கடி அதிகரிக்கும். முதலில் குழந்தைகளுக்குத் தலைவலி, கழுத்து வலி அதிகரிக்கும். அதன் பிறகு நிரந்தரமாக அவர்களின் கழுத்தும் பார்வையும் பாதிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.