ஒசூர் அஞ்செட்டி அருகே காரில் கடத்தப்பட்ட சிறுவன் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்ட விவகாரத்தில் இரு இளைஞர்களைக் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தைக் கண்டித்து, சிறுவனின் உறவினர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள அஞ்செட்டிக்கு அருகே இருக்கும் மாவநட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவரின் மகன் ரோகித், அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்குக் கிரிக்கெட் விளையாடச் சென்ற ரோகித், இரவில் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, ரோகித்தின் பெற்றோர் அஞ்செட்டி காவல் நிலையத்தில் இரவு 8 மணி அளவில் புகார் அளித்துள்ளனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, ரோகித்தை சிலர் காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.
சிசிடிவியில் அடையாளம் காணப்பட்ட இரு இளைஞர்களை இன்று (ஜூலை 4) காவல்துறையினர் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ரோகித்தை கொலை செய்து திருமொடுக்கு கீழ்பள்ளம் வனப்பகுதியில் வீசியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
குற்றவாளிகள் குறிப்பிட்ட இடத்திற்கு காவல்துறையினர் சென்று, வயிற்றில் குத்தப்பட்டு இறந்துகிடந்த ரோகித்தின் சடலத்தை மீட்டனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த கொலைக்கு உடந்தையானவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் வலியுறுத்தினார்கள். சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதற்கிடையே ரோகித்தை கொலை செய்தற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.