உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடரலாம்: உச்ச நீதிமன்றம் | Special Intensive Revision |

திமுக தாக்கல் செய்த மனுவுக்கு அடுத்த 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடரலாம் என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், திமுக தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட்டது.

சிறப்பு தீவிர திருத்தம் தொடர்புடைய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்புடைய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும், சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல் நடவடிக்கையைக் கைவிட உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் ஜாய்மால்ய பக்‌சி ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “பல மாநிலங்களில் ஒரே மாதிரியான சிறப்பு தீவிர திருத்தம் நடத்த உத்தரவிடுவது நியாயமற்றது. நவம்பர் - டிசம்பர் மாதங்கள் தமிழ்நாட்டில் கனமழை காலம். பெரும்பாலான அதிகாரிகள் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். டிசம்பரில் கிறிஸ்துமஸ் விடுமுறை இருக்கும். அப்போது மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருக்க வாய்ப்பில்லை. ஜனவரியில் பொங்கல் பண்டிகை நடக்கும். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நடத்துவது பொருந்தாதது. மேலும், தமிழ்நாட்டில் பல இடங்களில் இணைய தள சேவைகள் இல்லை. மலைக் கிராமம் போன்ற இணைய சேவை பிரச்னைகள் உள்ளது. இது வாக்காளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். லட்சக்கணக்கான படிவங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளது. அதற்குப் போதிய அவகாசம் இல்லை. தேர்தல் ஆணையம் போதிய அவகாசத்தை வழங்காமல் அவசர அவசரமாக பணிகளை மேற்கொள்வது மக்களைப் பெருமளவில் பாதிக்கும்” என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதற்கிடையில் வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு அதிமுக தரப்பில் தொடரப்பட்ட இடையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தேவையென்றால் தனியாக ரிட் மனு தாக்கல் செய்யலாம் என்று பரிந்துரைத்தனர். அதற்கு அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தாங்கள் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யவில்லை. ஆதரவாகத்தான் வாதிடுகிறோம் என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

அதன்பிறகு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்,

“சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் இருந்தாலும் இது அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏதோ வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முதல் முறையாக நடப்பது போல் நடந்து கொள்கிறீர்கள். நிலைமையின் உண்மைத்தன்மையை நாங்களும் அறிவோம். இந்த நீதிமன்றம் பிஹார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற பல மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த வழக்கை விசாரித்து வருவதால், அந்த மாநிலங்களில் உள்ள உரிய உயர்நீதிமன்றங்களில் இது தொடர்பான மனுக்கள் இருந்தால் தள்ளி வைக்க வேண்டும். விசாரிக்கக் கூடாது. தேர்தல் ஆணையம் அடுத்த 2 வாரங்களில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடரலாம்.” என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 26-க்கு ஒத்தி வைத்தனர்.

The Supreme Court, which has ordered that the Special Intensive Revision (SIR) of the electoral rolls in Tamil Nadu can continue, has directed the Election Commission to respond within two weeks to the petition filed by the DMK.