தமிழ்நாடு

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல்

கிழக்கு நியூஸ்

பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர், நேர்காணல் ஒன்றில் பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக அவர் மீது கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் துறையினர், சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4-ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் இவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். தேனியில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இதனிடையே, சவுக்கு சங்கரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல் துறை தரப்பில் கோவை நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல் துறையினர் 5 நாள்கள் கோரியிருந்த நிலையில், ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவல் துறையின் ஒருநாள் காவல் இன்று மாலையுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கரை மே 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றக் காவல் முடிந்தவுடன் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.