ANI
தமிழ்நாடு

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்: கோவை நீதிமன்றம்

கிழக்கு நியூஸ்

சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் காவல் துறையினரால் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். சைபர் கிரைம் காவல் துறையினர் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்த வழக்கில் பிணை கோரி சவுக்கு சங்கர் தரப்பில் கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இரு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சவுக்கு சங்கர் தரப்பில் தொடர்ந்து பிணை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. கைதாகி 80 நாள்களுக்கு மேல் ஆனதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. சைபர் கிரைம் காவல் துறை தரப்பில் பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பணமோசடி வழக்கில் பிணை வழங்கி கரூர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.