கஞ்சா வழக்கு விசாரணையில் ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு கோர்ட் பிறப்பித்த பிடிவாரண்ட் அடிப்படையில் கைது.
யூடியூபர் சவுக்கு சங்கர் தனது நேர்காணல் ஒன்றில் காவல்துறை உயரதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி காவல் ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே 4-ல் தேனி மாவட்டம், பூதிப்புரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சவுக்கு சங்கர் கோவை மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது கார் மற்றும் விடுதி அறையை காவல்துறையினர் சோதனை செய்தபோது அங்கே 2.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்நிலைத்தில், சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவர் உள்ளிட்ட, 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் கடந்த ஆக.12-ல் தேனியில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தேனியில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக பதியப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு, மதுரை போதைப்பொருள் தடுப்பு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதன் அடிப்படையில் தேனி மாவட்ட காவல்துறையினரால் சென்னையில் இன்று (டிச.17) கைது செய்யப்பட்டுள்ளார் சவுக்கு சங்கர். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.