தமிழ்நாடு

சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

கிழக்கு நியூஸ்

பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் தேனியில் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு கோவை அழைத்துச் செல்லும் வகையில் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு சங்கர் மற்றும் காவல் துறையினர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

தாராபுரத்தில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட, பிறகு அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார்.

கோவையில் சிறையில் வைத்து காவல் துறையினரால் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு சிறைத் துறை சார்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோவை நீதிமன்றத்தில் புகாரளிக்க, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவைச் சேர்ந்த 5 பேர் செவ்வாய்க்கிழமை சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதனிடையே, சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது குறித்து நீதித் துறை விசாரணை நடத்த வேண்டும், அவருக்குத் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என அவரது தாயார் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யும் வரை காத்திருக்கலாம் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

இந்தக் குழு கோவை நீதிமன்றத்தில் இன்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கருக்கு சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்பேரில் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.