புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்திருக்கும் வி.கே. சசிகலா, இந்தத் தருணத்திற்காக 9 ஆண்டுகள் காத்திருந்தேன் என்று கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டார். அதன்பின் 2017-ல் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். 2021-ல் சசிகலா விடுதலையான நிலையில், அவரைக் கட்சியிலிருந்து தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதையடுத்து அதிமுக தொண்டர்களை ஒன்றிணைக்க உள்ளதாகக் கூறி காத்திருந்த சசிகலா, புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.
கொடி அறிமுகம்
அதன்படி, நேற்று (பிப். 24) முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ராமநாதபுர மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறக் கொடியை வெளியிட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
“தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் கைவிட மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். அந்த வகையில், பசும்பொன் மண்ணில்தான் இந்த முடிவை எடுக்க வேண்டும் என இருந்தேன். இனியும் நான் பேசாமல் இருந்தால் அது ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகிவிடும். அதனால் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்துள்ளேன். அதன்படி, தமிழ்நாட்டிற்காகவும் தமிழ் மக்களுக்காகவும், நம் தொண்டர்களுக்காகவும் புதிய களத்தைக் காணப்போகிறோம்.
கட்சியின் பெயர் விரைவில் அறிவிப்பு
ஒரு புதிய கட்சியை தொடங்கப்போகிறோம். அது ஒரு திராவிட கட்சியாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் எளிய மக்களுக்கான கட்சியாக, எதிரிகளையும், துரோகிகளையும் வேரெறுக்கும் கட்சியாக செயல்படும். நமது கட்சியின் கொடி கொறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவத்தைத் தாங்கிப் பறக்கும். கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்” என்று பேசியிருந்தார்.
டிடிவி தினகரன் விமர்சனம்
சசிகலாவின் புதிய அறிவிப்பு அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. சசிகலாவின் உறவினரும், அமமுகவின் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் இதனை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- “அமமுக, அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் 99.9% ஒரே அணியில் இணைந்துவிட்டோம். ஜனநாயக நாட்டில் யாருடைய விருப்பம் எதுவேண்டுமனாலும் செய்யலாம். திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சிகள் வரலாம். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம், அதிமுகவை ஒன்றிணைப்போம் என்று கூறியவர்களின் சாயம் வெளுக்கும் நேரம் வந்துவிட்டது. 35 ஆண்டுகளாக எனக்கு மட்டுமே தெரிந்த சிலரது உண்மை முகங்கள், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிய வருகிறது” என்று பேசினார்.
கொடியின் விளக்கம்
இந்நிலையில், ராமநாதபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, தனது கொடியைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்தார். அவர் கூறியதாவது:-
“இந்தக் கொடி மக்களுக்கானது. இது தனிப்பட்ட ஆளுக்கானது அல்ல. எங்கள் கட்சியின் வரலாறே அப்படித்தான். இது ஏழைகளின் கொடி, உண்மையானவர்களின் கொடி, பசிதீர்க்கும் கொடி, வேலைவாய்ப்பை உருவாக்கும் கொடி, சமத்துவத்தின் கொடி, சாதி பேதம் இல்லாத மனிதர்களின் கொடி. நான் 39 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவள். இந்தத் தருணத்திற்காக 9 ஆண்டுகள் காத்திருந்தேன். இது எங்களுக்கான தருணம். தமிழ்நாட்டில் வாழும் கழக உடன்பிறப்புகள் அத்தனை பேருக்குமான உரிமை இந்தக் கொடிக்கு உண்டு. அதனால்தான் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் நாங்கள் இருப்போம். இது ஏழைகளுக்குத் தைரியத்தைக் கொடுக்கும் கொடியாக இருக்கும்” என்றார்.
V.K. Sasikala, who has announced the launch of a new party, said she had been waiting for this moment for 9 years.