படம்:https://twitter.com/realsarathkumar
படம்:https://twitter.com/realsarathkumar
தமிழ்நாடு

பாஜகவுடன் சமக கூட்டணி: சரத்குமார் அறிவிப்பு

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்துப் போட்டியிடுவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் (சமக) நிறுவனத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த சரத்குமார், முடிவு எட்டப்பட்டவுடன் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தொடர்ந்து தெரிவித்து வந்தார். பாஜக மற்றும் அதிமுக என இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகத் தகவல் வெளியாகின. இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க சரத்குமாருக்கு அதிகாரம் வழங்க கட்சியினுடைய உயர்நிலைக் குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டதாக சரத்குமார் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"பாஜக தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பிப்ரவரி 28-ல் என்னை நேரில் சந்தித்து, கூட்டணி குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார். இதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று மத்திய அமைச்சர் எல். முருகன், தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, பாஜக தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். இதுவும் சுமூகமாக நடந்தது.

இதையடுத்து, நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடியைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன்."

எனினும், தொகுதிப் பங்கீடு குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சமக திருநெல்வேலியில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.