கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

'வாட் ப்ரோ'...: விஜயை விமர்சித்துப் பேசிய சரத்குமார்

"அரசியல் வியூகத்தை வகுப்பதற்கு ஹிந்தி தெரிந்த ஒருவர் வந்து சொல்லிக்கொடுக்க வேண்டும்."

சுவாமிநாதன்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புரிந்துகொண்டு பேச வேண்டும் என பாஜக நிர்வாகி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் பாஜக சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற சரத்குமார் சிறப்புரையாற்றினார். தனது உரையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை சரத்குமார் மிகக் கடுமையாக சாடி பேசினார்.

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசிய விவகாரத்தை எடுத்து அவர் பேசியதைப்போல அவருடைய உடல்மொழியிலேயே பாஜக நிர்வாகி சரத்குமார் விமர்சனங்களை முன்வைத்தார்.

"இவர்கள் நிதி கேட்பார்கள், இவர்கள் நிதி கொடுக்க மாட்டார்கள். இப்படி ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நடுவில் நம்ம ஆளுங்க சம்பவம் செய்துவிட்டார்கள் என்றார் விஜய். என்ன சம்பவம் செய்தார்கள் என்று எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

ஒன்றை தெரிந்துகொண்டு விஜய் பேச வேண்டும். விஜய் மிகவும் பிரபலமான நடிகர் என்பதால், உண்மையைப் பேச வேண்டும். அதைப் புரிந்துகொண்டே பேச வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பவன் தான். அரசியலுக்கு வருபவர்களை வரவேற்பவன் நான். ஆனால், பேசும்போது கருத்தோடு பேசுங்கள். உண்மையைப் பேசுங்கள். உங்களுடையப் பிரபலத்தைப் பயன்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள்.

அரசியல் வியூகங்களை சொல்லிக்கொடுப்பதற்காக பிரசாந்த் கிஷோர் வந்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் தன்னை தோனியுடன் ஒப்பிடுகிறார். நான் மிகப் பெரிய தோனி ரசிகன். இந்த ஒப்பீடைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.

பிரசாந்த் கிஷோர் ஹிந்தி தெரியாத ஒருவரா? அரசியல் வியூகத்தை வகுப்பதற்கு ஹிந்தி தெரிந்த ஒருவர் வந்து சொல்லிக்கொடுக்க வேண்டும். யாரை ஏமாற்றுகிறீர்கள். வாட் ப்ரோ, ஏன் ப்ரோ, வை ப்ரோ...

பிஹாரில் அவர் சொந்தமாகப் போட்டியிட்டு டெபாசிடை பெறாமல் தோல்வியடைந்து வருகிறார்கள். டெபாசிட் இழந்தவர் இங்கு வந்து சொல்லிக் கொடுப்பாராம். இவர் தான் திமுகவை ஜெயிக்க வைத்தவராம். எனவே, தமிழக வெற்றிக் கழகத்தையும் ஜெயிக்க வைத்துவிடுவாராம். அன்புச் சகோதரர் பிரசாந்த் கிஷோர் அவர்களே பார்த்துவிடுவோம், வாருங்கள் " என்று சரத்குமார் பேசினார்.