மூன்று தொழிலாளர்களின் இடைநீக்கத்தை கண்டித்து காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக இன்று (ஜன.6) உள்ளிருப்புப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிற்சங்கத்தை பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தமிழக அமைச்சர்கள் குழு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுமூக உடன்பாடு எட்டப்பட்டு, கடந்தாண்டு அக்டோபர் 15-ல் போராட்டத்தை வாபஸ் பெற்று, ஊழியர்கள் பணிக்குத் திரும்பினார்கள். இதனை அடுத்து கடந்த வாரம், `சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தொழிற்சாலையில் பணிநேரத்தின்போது விதிமுறைகளை மீறியது, உணவு இடைவேளைக்குப் பிறகும் பணிக்குத் திரும்பாதது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி மூன்று தொழிலாளர்களை சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் சிஐடியூ சங்கத்தினர், தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் தமிழக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.
இதனால் 500-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் நேற்று (பிப்.5) தொடங்கி தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தொழிற்சாலைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.