ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று நான் போட்ட அரசியல் குண்டுக்கு முதலமைச்சரே பதறுகிறார் என்று பேசிய தவெக தலைவர் விஜய், இந்தத் தேர்தல் மக்கள் விரும்பும் விஜயா, மக்கள் விரோத ஸ்டாலினா என்பதற்கானது என்று பேசினார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:-
தமிழ்நாடுதான் என் வீடு
“ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா, பனையூரை விட்டு வெளியே வா என்று சொல்பவர்களுக்கு என் வீடு எது என்று தெரியுமா? தமிழ்நாடு மற்றவர்களுக்கு வேண்டுமானால் மாநிலமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை அதுதான் என் வீடு. என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கிறார்கள். காசு கொடுத்து வாக்கு வாங்குவது விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு நடக்காது. வண்டி வண்டியாகக் கொண்டு வந்து கொட்டுவார்கள். அதையெல்லாம் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளுங்கள். அதெல்லாம் உங்கள் பணம்தான். வாங்கிக்கொண்டு அவர்கள் காதுகளில் விசிலை ஊதி அனுப்புங்கள்.
விஜய் என்ன தவறு செய்தேன்?
உங்கள் விஜய் உங்களிடம் வாக்கு கேட்டு மட்டும் வரவில்லை. நீதி கேட்டு வந்திருக்கிறேன். விஜய் என்ன தவறு செய்தான்? நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தவறா? மற்ற கட்சிகளுக்கு பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கொடுக்கிறார்கள். எனக்கு மட்டும் மறுக்கிறார்கள். இது என்ன நியாயம்? எஸ்.ஓ.பி என்று சொல்வார்கள். எனக்கு மட்டும் அது ஏன் ஸ்டாலின் ஆபரேஷன் புரொசீஜராக இருக்கிறது.
ஜென் ஸி வாக்காளர்களுக்கு...
ஜென் ஸி தலைமுறையினருக்கு சொல்கிறேன். நான் சொல்வதைச் சொல்லுங்கள். “எங்கள் வாக்கு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் வாக்கு விசில் சின்னத்திற்குத் தான். வேறு யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்.” வீட்டில் தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் என் குட்டிக்குட்டி நண்பா, நண்பிகளுக்குச் சொல்கிறேன். உங்கள் எதிர்காலத்திற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இணையத்தில் நான் சில அழகான காணொளிகளைப் பார்த்தேன். அதில், மைக்கை நீட்டி பெரியவர்களிடம் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கேட்பதற்குப் பின்னால் இருந்து நீங்கள் விஜய்க்குப் போடுவேன் என்று சொல்லச் சொல்கிறீர்கள். இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
என்ன அனுபவம் இருக்கிறது?
நாங்கள் அரசியலுக்கு வந்தது எந்தக் கட்சியையோ ஒழிப்பதற்காக இல்லை. யார் மீதும் தனிப்பட்ட கோபமோ, வெறுப்போ கிடையாது. அரசியல் ரீதியாக நமது எதிரிகள் யார் என்று அறிவித்துவிட்டு, தேர்தலில் நின்று ஜெயித்துவிட்டு, மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். இப்போது பலரும் தங்கள் ஏ டீம், பி டீம்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு அனுபவம் இல்லாதவர்கள் எப்படி ஆட்சி அதிகாரத்தைச் செய்ய முடியும் அழுகிறார்கள். அவர்களுக்குச் சொல்கிறேன், அடுத்தவர்கள் தொடங்கிய அரசியல் கட்சியில், அடுத்தவர்களின் முகவரியில் அரசியல்வாதிகளாக இருக்கும் அவர்களுக்கு ஒரு சவால். என்னைப்போல் சொந்தமாக அரசியல் கட்சி, ஒரு சதவீத வாக்காவது வாங்கிக் காட்ட தைரியம் இருக்கிறதா? 75 ஆண்டு கால பாரம்பரியம் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளே கூட்டணியை நம்பிக்கொண்டு இருக்கும்போதும், அவர்களையும் மீறி களத்தில் தனியாக நின்று, இரண்டே ஆண்டுகளில் முதன்மைச் சக்தியாக வளர்ந்து மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள நமக்கு அனுபவம் இல்லையா?
உங்கள் அனுபவம் என்ன தெரியுமா?
உங்கள் அனுபவம் என்னவென்று சொல்லட்டுமா? கட்சி ஆரம்பித்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மறந்தது. இவர்கள் பேசியவற்றையும், பின்பற்றச் சொன்னவற்றையும் மறந்தது. எங்களுக்கு அனுபவம் இல்லை என்று நீங்கள் கூறுவது ஒருவகையில் உண்மைதான். எங்களுக்கு கொள்ளையடிப்பதில் அனுபவம் இல்லை. கொள்கையைப் பெயரளவில் மட்டும் வைத்துக்கொண்டு நேரடியாகவோ, மறைமுகமாகவோ சரணடைவதற்கு எங்களுக்கு அனுபவம் இல்லைதான். அது சுட்டுப் போட்டாலும் வராது. காமராஜர், எம்ஜிஆரைப் போல் மக்கள் சக்தி, மக்கள் மீது அக்கறை கொண்ட அதிகாரிகளின் துணையுடன் ஒரு நல்லாட்சி என்னால் கொடுக்க முடியும். நான் செய்து காட்டுகிறேன்.
”உங்கள் கனவைச் சொல்லுங்கள்”
நாலே முக்கால் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி “உங்கள் கனவைச் சொல்லுங்கள். நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம்” என்று சொல்கிறார்கள். ஸ்டாலின் சாருக்கு மக்கள் சார்பாக ஒரு கேள்வி கேட்கிறேன். மக்கள் கனவு என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அது சரி! மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றே உங்களுக்குத் தெரியாது. பிறகெப்படி அவர்களின் கனவு என்ன என்பது உங்களுக்குத் தெரியும்? மக்களின் கனவை நான் சொல்லட்டுமா சார்? 2019, 2021, 2024 மூன்று தேர்தல்களிலும் மக்கள் உங்களுக்கு வாக்களித்த காரணம், நீங்கள் அவர்களுக்கு நல்லது செய்வீர்கள் என்றுதான். ஆனால் நீங்கள் கொடுத்த பரிசு, பாதுகாப்பே இல்லாத மக்கள் விரோத ஆட்சிதான். அதை அகற்றிவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சிப் பீடத்தில் அமர்த்த வேண்டும் என்பதுதான் மக்களின் கனவு.
ஸ்டாலின் அவுட் ஆஃப் கன்ட்ரோல்
தமிழ்நாடு எப்போதும் தில்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ஸ்டாலின் சார் அடிக்கடி சொல்வார். அவர் எதில் எல்லாம் அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று நான் சொல்லட்டுமா? சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு போன்றவற்றில் அவுட் ஆஃப் கன்ட்ரோல். மொத்தத்தில் அவரது ஆட்சியே அவுட் ஆஃப் கன்ட்ரோல். மக்கள் உண்மையிலேயே உங்கள் ஆட்சியில் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால், ஏன் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது? மீனவர்கள் போராட்டம் ஏன் நடக்கிறது? ஏன் தொழிலாளர்கள் போராட்டம் நடக்கிறது? ஆட்சிக்கு வருவதற்கு முன்புதான் பொய் பொய்யாக அடித்து விட்டீர்கள். ஆட்சியை விட்டுப் போகும்போது கூட பொய் பொய்யாகப் பேசுகிறீர்களே, என்னது சார் இது? மாற்றி மாற்றி பேசுவதில் நீங்கள் வேற லெவல் சார்.
தமிழ்நாட்டிற்கு டிஜிபி எங்கே?
பெண்களுக்குப் பாதுகாப்பு தமிழ்நாட்டில் எங்கு போனாலும் கொட்டிக் கிடக்கிறதாம். அது உண்மையென்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்தப் பெண்ணுக்கு ஏன் அப்படி ஒரு கொடுமை நடந்தது? கோவை கல்லூரி மாணவிக்கு ஏன் அப்படி ஒரு கொடுமை நடந்தது? பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக ஆயிரத்திற்கும் மேலான போக்சோ வழக்குகள் ஏன் பதிவாகின்றன? போதைப்பொருள் கலாசாரம் தாறுமாறாக எங்கோ சென்று கொண்டிருக்கிறது. வன்முறை தலைவிரித்தாடுகிறது. அது சமீபத்திய உதாரணம், ரயில் நிலையத்தில் சிறுவர்கள் சேர்ந்து செய்த சம்பவம். சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஏன் இப்படியெல்லாம் நடக்கப்போகிறது? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்கு ஒரு டிஜிபி வேண்டும். டிஜிபி எங்கே சார்? தற்காலிக அதிகாரிகளை வைத்துக்கொண்டு அரசை நடத்தினால் சட்டம் ஒழுங்கு இப்படித்தான் சந்தி சிரிக்கும்.
தேர்தல் அறிக்கை விரைவில் வரும்
கேள்வியாகக் கேட்கிறாயே நீ வந்தால் என்ன செய்வாய் என்று கேட்கிறீர்களா? மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்ப்பதுதான் நமது முதல் வேலையே. அதற்கான தீர்வைத் தேடிப் போவதுதான் நமது முதல் குறிக்கோள். கொஞ்சம் காத்திருங்கள். தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. அதில் அனைத்தும் தெளிவாக இடம்பெறும்.
திமுகவா? தவெகவா?
மக்கள் விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? அவ்வளவுதான் இந்தத் தேர்தலே! சேலம் மக்களே இறுதியாக ஒரே ஒரு கேள்வி, விஜயை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா? அவ்வளவுதான் கதம் கதம்! போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்கவிடாது.
அரசியல் குண்டு
விக்கிரவாண்டி மாநாட்டில் நான் பேசியபோது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று அரசியல் குண்டு ஒன்றைப் போட்டேன் நினைவிருக்கிறதா? அது இப்போது எல்லாக் கூட்டணிக்குள்ளும் வெடித்துக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சார் அதைக் கேட்டுப் பதறுகிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது என்கிறார். அவர்களைப் பொறுத்தவரை ஜெயிப்பதற்கு மட்டும்தான் கூட்டணி. மற்றதற்கெல்லாம் அவர்கள் தனி அணி. அவர்கள் மட்டும்தான் ஒரே அணி. வெல்வோம் ஒன்றாக, வரும் வளத்தை எல்லாம் பார்ப்போம் தனியாக. இதுதான் ரகசியம், புரிய வேண்டியவர்களுக்கு நன்றாகப் புரியும் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.
TVK leader Vijay said that the Chief Minister himself is panicking over the political bombshell I dropped about a share in the ruling power. This election is all about the people's favorite Vijay? or the anti-people Stalin? he added.