தாம்பரம் ரயில் நிலையத்தில், ரயில் பணிமனை பராமரிப்புக் காரணமாக காலை 9 மணி முதல், மதியம் 1 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையிலும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையிலும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலும் மின்சார ரயில்கள் வழக்கமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வழக்கமான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்களில் வந்த பயணிகள் அனைவரும் கூடுவாஞ்சேரியில் இருந்து அரசுப் பேருந்துகளில் தாம்பரம் செல்ல முயற்சி செய்ததால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதே போல தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்பட்ட அரசு பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றனர்.
தாம்பரத்துக்கு வந்த மக்கள் அங்கிருந்த பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை நகருக்குள் செல்ல பேருந்துகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அவை போதவில்லை, எனவே அதிகமான பேருந்துகளை மேலும் இயக்க வேண்டும் என்றும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வழக்கத்தைக் காட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், போக்குவரத்து நெரிசலாலும் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் மெதுவாகச் சென்றன.