பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தஞ்சாவூரைச் சேர்ந்த இல. கணேசன் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் இயக்கப் பின்னணியைக் கொண்டவர். இல. கணேசனுடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர். இவருடைய குடும்பமே ஆர்எஸ்எஸ் குடும்பம். தஞ்சாவூரில் சங்கம் வந்ததிலிருந்து இல. கணேசன் குடும்பத்துக்கு ஆர்எஸ்எஸ் தொடர்பு உள்ளது. இல. கணேசன் உள்பட சகோதரர்கள் சிலர் ஷாகாவுக்குச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக இயங்கி வந்த இல. கணேசன், நெருக்கடி நிலை காலத்தில் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து நெருக்கடி நிலையை எதிர்த்து வந்தார். தனது 25 வயதில் அரசு வேலையைவிட்டு, ஆர்எஸ்எஸ்-ல் முழுநேரமாகச் செயல்படத் தொடங்கினார்.
1990-க்குப் பிறகு பாஜகவில் இணைந்தார் இல. கணேசன். பாஜகவில் மாநில அமைப்புப் பொதுச்செயலாளராக இருந்துள்ளார். தேசியச் செயலராக இருந்துள்ளார். அகில இந்திய அளவில் பாஜகவின் துணைத் தலைவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்துள்ளார்.
இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு, மாநில துணைத் தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் மாநிலத் தலைவரானார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இல. கணேசனுக்குக் கட்சியில் பெரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
நீண்ட காலமாக அரசியலில் இருந்த காரணத்தால் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் இவருக்கு நல்ல பழக்கம் இருந்துள்ளது. ஜெயலலிதாவை விட கலைஞர் கருணாநிதியுடன் இவருக்கு நல்ல நட்பு இருந்துள்ளது. கலைஞருடனான சந்திப்புகளில், இல. கணேசனை மாடியிலிருந்து கீழே வரை வந்து வழியனுப்பும் அளவுக்கு இல. கணேசனுடன் கலைஞர் நட்பு பாராட்டி வந்துள்ளார்.
அரசியலைக் கடந்து கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இல. கணேசன், பொற்றாமரை என்ற பெயரில் கலை இலக்கிய அமைப்பத் தொடங்கி நடத்தி வந்தார்.
கடந்த 2021-ல் மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டார். 2023-ல் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநராகவும் இல. கணேசன் நியமிக்கப்பட்டார். நாகாலாந்து ஆளுநராகப் பொறுப்பு வகித்தும் வரும் நிலையில், அவருடைய உயிர் பிரிந்துள்ளது.
La. Ganesan | Nagaland Governor | Nagaland Governor La. Ganesan