மகளின் தற்கொலை வழக்கு விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் தலையீடு உள்ளது என்று, வரதட்சணை கொடுமையால் திருப்பூரில் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி பகுதிக்கு உள்பட்ட கைகாட்டிபுதூரை சேர்ந்த கவின்குமாருக்கு, ரிதன்யா என்பவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 28 அன்று மொண்டிபாளையம் அருகே காரில் இருந்தபடி ரிதன்யா விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது தந்தைக்கு ரிதன்யா அனுப்பிய வாட்ஸ்அப் குரல் பதிவில், தன் தற்கொலைக்கு கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரே காரணம் என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ரிதன்யாவின் தற்கொலை தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சேவூர் காவல்துறையினர், கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி ஆகியோரைக் கைது செய்தனர். திருமணமான மூன்றே மாதங்களில் ரிதன்யா தற்கொலை செய்துகொண்டதால், இந்த விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் மோகனசுந்தரம் விசாரித்து வருகிறார்.
இதற்கிடையே, திருமணத்தின்போது கணக்கின்றி நகைகள் அளித்தபோதும், வரதட்சணை கேட்டு தன் மகள் துன்புறுத்தப்பட்டதாக ரிதன்யாவை தந்தை குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ரிதன்யா குடும்பத்தினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று (ஜூலை 1) சந்தித்தனர். அப்போது, மகளின் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் தலையீடு உள்ளதாக ரிதன்யாவின் தந்தை குற்றம்சாட்டியுள்ளதாக புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிதன்யாவின் தற்கொலை செய்தி வெளியான பிறகு, ஈஸ்வரமூர்த்தியின் குடும்பம் பாரம்பரியமான காங்கிரஸ் பின்னணியைச் சேர்ந்ததாக செய்திகளில் கூறப்பட்டது.