சென்னை உயர் நீதிமன்றம் 
தமிழ்நாடு

நேர்காணல் எடுப்பவர்கள் முதல் எதிரி: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

கிழக்கு நியூஸ்

நேர்காணல்களில் அவதூறாகப் பேசினால், நேர்காணல் எடுப்பவர்களையே வழக்கில் முதல் எதிரியாகச் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர், நேர்காணல் ஒன்றில் பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக அவர் மீது கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் துறையினர், சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் இவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

சென்னையில் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் மற்றும் தலைவர் வீரலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மற்றும் நேர்காணல் எடுத்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, முன்ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவற்கான உரிய நேரம் இது என்று கருத்து தெரிவித்தார்.

நேர்காணல் அளிப்பவர்கள் அவதூறான கருத்துகளைத் தெரிவித்தால், அவர்களைத் தூண்டும் வகையில் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக வழக்கில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், ஃபெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.