மாதிரி படம் 
தமிழ்நாடு

நெல்லையில் முன்னாள் எஸ்ஐ கொலை: பின்னணி என்ன?

தான் கொலை செய்யப்படலாம் என்பதை கொலை செய்யப்படுவதற்கு முன்பு காணொளியாக வெளியிட்டது தற்போது கவனம் பெற்று வருகிறது.

கிழக்கு நியூஸ்

திருநெல்வேலியில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ஜாகிர் உசேன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியில் வசித்து வருகிறார் ஜாகிர் உசேன். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் தனிப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியுள்ள இவர், உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நெல்லையில் இவர் வசித்து வரும் இடத்தில் இவருக்கு இடப் பிரச்னை இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று காலை தொழுகைக்காக பள்ளி வாசலுக்குச் சென்ற அவர், வீடு திரும்பும்போது மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதில் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கொலைச் சம்பவம் தொடர்பாக அக்பர்ஷா மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள்.

கொல்லப்பட்ட ஜாகீர் உசேன் மற்றும் வழக்கறிஞர் ஒருவருக்கு இடையே இடப்பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாகவே ஜாகீர் உசேன் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் சரண் அடைந்தவர்களுக்கும் முன்விரோதச் சம்பவத்தில் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜாகிர் உசேன் சாதியைச் சொல்லி திட்டியதாகக் கூறி வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் ஜாகிர் உசேன் மீது கடந்த ஜனவரியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாகிர் உசேன் முன்பிணை பெற்றிருந்ததால் கைது செய்யப்படவில்லை.

இதனிடையே, தான் கொலை செய்யப்படலாம் என்பதை முன்கூட்டியே ஊகித்த ஜாகிர் உசேன் தனது வழக்கறிஞர் தரப்பிலிருந்து பல்வேறு மிரட்டல்கள் வருவதாகவும் தான் கொலை செய்யப்படவுள்ளதாகவும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக புகாரளித்துள்ளதாகவும் அவர் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜாகிர் உசேன் கொல்லப்பட்டதையடுத்து, இந்த காணொளி மிகப் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

காவல் துறை முன்னாள் அதிகாரிகள் மீது ஜாகிர் உசேன் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.