தமிழ்நாடு

குடியரசு நாள் விழா: ஆளுநர் ஆர்.என். ரவி கொடியேற்றினார்

கிழக்கு நியூஸ்

75-வது நாள் குடியரசு நாள் விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் தேசியக் கொடியேற்றினார்.

குடியரசு நாள் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள காமராசர் சாலையில், உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா காலை நடைபெற்றது. விழாவுக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். குடியரசு நாள் விழாவில் முப்படைகளின் உயர் அலுவலர்கள், தமிழ்நாடு காவல் துறை உயர் அலுவலர்கள் ஆகியோரை ஆளுநருக்கு முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உடனிருந்தார்.

இதன்பிறகு, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி காலை 8 மணிக்கு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இதன்பிறகு, முப்படை, காவல் துறை, தேசிய மாணவர் படை, பல்வேறு காவல் பிரிவு, வனம் மற்றும் தீயணைப்புப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்துஅண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் நாராயணசாமி நாயுடு வேளாண்மை விருது, முதல்வரின் சிறப்பு விருது, காவல் நிலையத்துக்கான முதல்வரின் கோப்பைகள் உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதாளர்களுக்கு வழங்கினார்.

மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது ஆல்ட் நியூஸ் எனப்படும் உண்மைக் கண்டறியும் செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஸுபைருக்கு வழங்கப்பட்டது. இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரசுப் பள்ளிக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான நிலத்தைக் கொடையாகக் கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

கலைக் குழுவினரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அரசின் திட்டங்கள் விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளை ஆளுநரும், முதல்வரும் பார்வையிட்டார்கள்.