PRINT-91
தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் கோவை இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

சிகிச்சை அளித்த மருத்துவர் வெளிநாட்டில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு, இந்திய அரசு நடத்தும் தகுதித்தேர்வில் இன்னமும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது

ராம் அப்பண்ணசாமி

தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதி கேட்டு கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு முன்பு இளைஞரின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரபு என்ற இளைஞர், நேற்று (செப்.21) அவருக்கு ஏற்பட்ட வயிற்று வலிக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள அவரது இல்லத்துக்கு அருகே உள்ள தனியார் கிளினிக்குக்குச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர் பிரபுவுக்கு ஊசி செலுத்திய ஒரு மணிநேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதை அடுத்து இன்று (செப்.22) காலை பிரபுவின் உடலுக்கு கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உடல்கூராய்வு நடந்தது. அதேநேரம் அவரது இறப்புக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.

பிரபுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வெளிநாட்டில் மருத்துவப்படிப்பை முடித்ததாகவும், இந்திய அரசு நடத்தும் மருத்துவர்களுக்கான தகுதித் தேர்வில் கலந்துகொண்டு உரிய மருத்துவ அங்கீகாரம் பெறவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக `சந்தேகத்திற்குரிய மரணம்’ என்ற பிரிவில் சுல்தான்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் இணை இயக்குநர் ராஜகோபால், சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கிளினிக்குக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.