தமிழ்நாடு

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பதிவுக் கட்டணம் குறைப்பு: அமலுக்கு வந்த அறிவிப்பு!

தற்போது அசையா சொத்துகளைப் பதிவு செய்யும்போது, அவற்றின் மதிப்பில் 7 சதவீதத்தை முத்திரை தாள் கட்டணமாகவும், 2 சதவீதத்தை பதிவுக் கட்டணமாகவும் செலுத்தவேண்டும்.

ராம் அப்பண்ணசாமி

பெண்களின் பெயரில் பத்திரப் பதிவு மேற்கொண்டால், பதிவுக் கட்டணத்தில் 1% குறைக்கப்படும் என்று 2025-26 தமிழக பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு அமலுக்கு வந்தது.

2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த மார்ச் 14 அன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பல்வேறு தரப்பினரின் கவனமும் பட்ஜெட் அறிவிப்புகள் மீது இருந்தது.

அதேநேரம் தேர்தலைக் கருத்தில்கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.  குறிப்பாக, பெண்களின் பெயரில் அசையா சொத்துகளைப் பதிவு செய்தால் பதிவுக் கட்டணத்தில் 1% குறைக்கப்படும் என்று வெளியான அறிவிப்பு பெறும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) முதல் அந்த பட்ஜெட் அறிவிப்பு அமலுக்கு வந்தது. இதன்படி ரூ. 10 லட்சத்திற்கு உட்பட்ட அசையா சொத்துகளான வீடுகள், நிலங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றைப் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும்போது, பதிவுக் கட்டணத்தில் 1% குறைக்கப்படும்.

தமிழகத்தில் தற்போது அசையா சொத்துகளைப் பதிவு செய்யும்போது, அவற்றின் மதிப்பில் 7 சதவீதத்தை முத்திரை தாள் கட்டணமாகவும், 2 சதவீதத்தை பதிவுக் கட்டணமாகவும் செலுத்தவேண்டும். அந்த வகையில், ரூ. 10 லட்சத்திற்கு உட்பட்ட அசையா சொத்துகளை பெண்களின் பெயரில் பதிவு செய்யும்போது, பதிவுக் கட்டணம் 1 சதவீதம் ஆக மட்டுமே இருக்கும்.