பொறியியல் கலந்தாய்வுக்கு கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் மாணவர் விண்ணப்பங்கள் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்முடி கூறியதாவது:
"கல்வி வளர்ச்சியில் முதல்வர் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். இதனால்தான் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படித்தவர்களின் சதவீதம் 52 ஆக உயர்ந்துள்ளது. இது திராவிட மாடல் ஆட்சியில் நடக்கும் சாதனை என்பதை யாரும் மறுக்க முடியாது.
பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூலை 22 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறுகிறது. நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக வந்துள்ளன. கடந்தாண்டு 2.29 லட்சம் பேர் விண்ணப்பத்திருந்தார்கள். நடப்பாண்டில் 2.53 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்
பாலிடெக்னிக் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றன. பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை இந்த ஆண்டு மேற்கொண்டுள்ளோம். தொழிற்கல்வி, பாலிடெக்னிக் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வித் துறை எடுத்து வருகிறது.
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டம் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது" என்றார் பொன்முடி.