படம்: https://x.com/ANI/
தமிழ்நாடு

உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்: திருமாவளவன்

"தலித் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாதுகாப்பற்ற சூழல்களில் இருக்கிறார்கள்."

கிழக்கு நியூஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரிலுள்ள மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை வந்த பகுஜன் சமாஜ் தேசியத் தலைவர் மாயாவதி ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

திருமாவளவன், செல்வப்பெருந்தகை, சசிகாந்த் செந்தில், வெற்றிமாறன், பா. ரஞ்சித், சீமான் உள்ளிட்டோர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

திருமாவளவன் கூறியதாவது:

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. கோழைத்தனமான படுகொலை. ஓர் அரசியல் கட்சித் தலைவர் பட்டப்பகலில் மாலை 5 மணியளவில் இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.

இத்தகையக் கோழைத்தனமாகப் படுகொலையை ஜனநாயக சக்திகள் பலரும் கண்டித்துள்ளார்கள். அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாஜக தலைவரும் கண்டனம் செய்யும் அளவுக்குக் கொடூரமான கொலை இந்தக் கொலை. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி வருகை தந்து மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, படுகொலையைக் கண்டித்துள்ளார்.

அவர் மீது எந்த வழக்கும் இல்லை, காவல் துறை விசாரணையும் இல்லை. ஆனால், தொடர்பே இல்லாத வழக்கோடு இவரைத் தொடர்புபடுத்தி, சமூக விரோதக் கும்பல் திட்டமிட்டு இந்தப் படுகொலையைச் செய்துள்ளது. உண்மையான குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுதான் பகுஜன் சமாஜ் கட்சி சார்பிலும், இவருடையக் குடும்பத்தின் சார்பிலும் வைக்கப்படக்கூடிய முக்கியமான கோரிக்கை. எனவேதான், இதை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய கட்டாயம் மாயாவதிக்கு ஏற்பட்டுள்ளது. உண்மையான குற்றவாளிகள் யார் என்பதைக் காவல் துறையினர் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக, தலித் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் சிறிய அளவில் பணியாற்றக்கூடிய அளவில் இருந்தாலும், ஆம்ஸ்டிராங் போன்ற தலைவர்களாக இருந்தாலும், அவர்கள் பாதுகாப்பற்ற சூழல்களில் இருக்கிறார்கள் என்பதைத்தான் இது உணர்த்துகிறது.

தமிழக அரசு இதுபோன்ற வன்கொடுமைகள் நடப்பதற்குக் காரணம் எது, பின்னணி எது, திட்டமிடக்கூடிய கும்பல் யார், இதில் பங்கேற்கக்கூடிய கூலிப்படை யார் என்பதையெல்லாம் ஆராய்ந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார் திருமாவளவன்.