சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய சென்னை நகரம், பிரிட்டிஷ் காலனி ஆட்சி காலகட்டத்தில் மதராஸ் நகரம் என்று அழைக்கப்பட்டது. 1688-ல் இந்தியாவின் முதல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது அன்றைய மதராஸ் நகரம். அதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் அலுவலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டது.
ஏறத்தாழ 2 நூற்றாண்டுகளுக்கு பிறகு, சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தனி கட்டடம் கட்டும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு அருகே உள்ள காலி இடம் ஒதுக்கப்பட்டது. காலி இடத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்காக, 1909-ல் அடிக்கல் நாட்டினார் அன்றைய இந்திய வைசிராய் மின்டோ பிரபு.
ரூ. 7.5 லட்சம் பொருட்செலவில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டடம், 1913-ல் திறக்கப்பட்டது. இந்திய கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவரும், இந்திய உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அறியப்பட்டவருமான ரிப்பன் பிரபுவின் பெயர் கட்டடத்துக்குச் சூட்டப்பட்டது. இந்நிலையில் 111 வருடங்கள் பழமையான இந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க அழைப்பு விடுத்துள்ளது சென்னை பெரு மாநகராட்சி நிர்வாகம்.
commcellgcc@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் 9445190856 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றை தொடர்புகொண்டு ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க பொதுமக்கள் பதிவு செய்யலாம். ரிப்பன் மாளிகையின் கட்டுமான வரலாறு, மாநகராட்சி நிர்வாகம் இயங்கும் முறை உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளும் வகையில் சுற்றுலா திட்டம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.