அமீர் 
தமிழ்நாடு

விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: ஜாஃபர் சாதிக் வழக்கு குறித்து அமீர்

“உண்மையையும், நியாயத்தையும் எடுத்து சொல்லி, வெற்றியோடு திரும்ப வருவேன்”

யோகேஷ் குமார்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட 3 நபர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இது குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அமீர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் கடந்த மார்ச் 9-ல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஜாஃபர் சாதிக் நடத்தி வந்த கும்பல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜாஃபர் சாதிக்குக்குத் தமிழ்த் திரைத் துறை மற்றும் பாலிவுட்டில் தொடர்பு இருப்பதாகவும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜாஃபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட மூன்று நபர்கள், ஏப்ரல் 2 அன்று தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்று காலை சம்மன் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அளித்துள்ள சம்மனை எதிர்கொள்ளத் தயார் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த ஆடியோவில் அவர் பேசியதாவது: “ஜாஃபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனது தரப்பிலிருக்கும் உண்மையையும், நியாயத்தையும் எடுத்து சொல்வேன். இறைவன் அருளால் 100 சதவீதம் வெற்றியோடு திரும்ப வருவேன்” என்றார்.