ANI
தமிழ்நாடு

மே மாதத்துக்கான ரேஷன் பொருள்களை ஜூனிலும் பெறலாம்: தமிழ்நாடு அரசு

கிழக்கு நியூஸ்

மே மாதத்துக்கான பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள், ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்னும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு மட்டும் நடைபெறவிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமீறல் மார்ச் 16-ல் முதல் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமீறல் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு, அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜூன் மாதம் முதல் வாரம் வரை நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல 24,96,510 கிலோ துவரம் பருப்பு மற்றும் 33,57,352 பாமாயில் பாக்கெட்டுகள் நியாய விலைக் கடைகளில் தயார் நிலையில் இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. மேலும், 8,11,000 கிலோ துவரம் பருப்பு மற்றும் 7,15,395 பாமாயில் பாக்கெட்டுகள் கிடங்குகளில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.