தமிழ்நாடு

ராசிபுரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிஆர் சுந்தரம் காலமானார்

2021-ல் திமுகவில் இணைந்தார்.

கிழக்கு நியூஸ்

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான பிஆர் சுந்தரம் (73) காலமானார்.

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற நால்வரில் ஒருவர் பிஆர் சுந்தரம். ஜெயலலிதாவுக்கு அப்போது வெற்றி கிடைக்கவில்லை. இவர் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அதிமுக சட்டப்பேரவைத் தலைவராகவும் பிஆர் சுந்தரம் நீடித்தார்.

2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட, அவர் மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த பிஆர் சுந்தரம், 2021-ல் திமுகவில் இணைந்தார். திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்தார் பிஆர் சுந்தரம். இவர் உடல்நலக் குறைவால் காலமானார்.

இவருடைய மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.