அன்புமணி ராமதாஸ் கட்சிக்கு இடையூறாக இருந்ததாகவும் தாயை அடிக்க முயன்றதாகவும் காடுவெட்டி குருவை கீழ்த்தரமாக நடத்தியதாகவும் எனப் பல குற்றச்சாட்டுகளை பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கியுள்ளார்.
அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்ற விமர்சனத்தையும் ராமதாஸ் முன்வைத்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணியும் சௌமியாவும் என் காலைப் பிடித்து அழுதார்கள் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பொறுப்பலிருந்து நீக்க நான் என்ன தவறு செய்தேன் என பாமக தலைவர் அன்புமணி பேசியிருந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ராமதாஸ் கூறியதாவது:
"தருமபுரியில் ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியது நீங்கள் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். நாடும் பார்த்தது. நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் எனக்கு இந்தப் பதவி நீக்கம் அல்லது பதவி இறக்கம் என்று அன்புமணி சொல்லியிருக்கிறார்.
இது முழுக்க முழுக்க மக்களையும் கட்சிக்காரர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும். தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும் கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சித்திருக்கலாம். இருப்பினும், அதற்கு உண்டான விளக்கத்தையும் பதிலையும் அளிப்பது எனது கடமையாகும்.
இனிப்பைத் தவிர்த்து கசப்பான வார்த்தைகளைக் கொண்ட மருந்தை தான் பதிலாகக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சொல்லப்போனால், தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியை என்னுடைய சத்தியத்தையும் மீறி 35 வயதில் மத்திய கேபிடனட் அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன். என்ன தவறு செய்தேன் எனக் கேள்வி கேட்டு என்னைக் குற்றவாளியாக மக்கள் மத்தியிலும் கட்சிக்காரர்களிடமும் அடையாளம் அனுதாபத்தைப் பெற முயற்சித்திருக்கிறார். நான் அதற்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.
அன்புமணி தான் தவறு செய்தவர். அவர் தான் தவறான ஆட்டத்தைத் தொடங்கி முதலில் அடித்து ஆட ஆரம்பித்தது அன்புமணி தான். ஏதோ நான் போகிறபோக்கில் நான் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. ஆதாரத்தோடு இன்று ஒளிவுமறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்துகிறேன்.
புதுச்சேரி பொதுக்குழுவில் என்ன நடந்தது? உலகமே பார்த்து அதிர்ந்தது. மேடை நாகரிகமோ அல்லது சபை நாகரிமோ எதையும் கடைபிடிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொண்டது யார்?
நான் ஓர் அறிவிப்பை வெளியிட்டேன். முகுந்தனை இளைஞரணிச் செயலாளர் என்று வீட்டில் எனக்கு உதவியாகவும் கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இருக்க முகுந்தனை நியமனம் செய்தேன். சுவற்றில் வீசிய பந்து திரும்புவது போல உடனே மேடையில் மறுப்பு தெரிவித்தது சரியான செயலா? மேடையில் மேடை நாகரிகம் கருதாமல் அனைவரது முன்பும் கால்களை ஆட்டிக்கொண்டிருந்தது சரியான செயலா? மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக மேசையில் வீசியது சரியான செயலா? பனையூரில் அலுவலகம் திறந்திருக்கிறேன், நீங்கள் அங்கு வந்து இனி என்னைப் பார்க்கலாம் என்பது சரியான செயலா? தொடர்புக்கு தொலைபேசி எண்ணைக் கொடுத்தது சரியான செயலா நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை நடு வீதிக்குக் கொண்டு வந்தது யார்?
அழகான ஆள் உயர கண்ணாடி என்ற கட்சியை ஒரே நொடியில் உடைத்து நொறுக்கியது யார்? அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என அனைவரும் பெரிதும் வருந்தினார்கள். கடந்த 45 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை அண்ணா சொன்னதைப்போல கடமை கண்ணியம் கட்டுப்பாடோடு நடத்தினேன். அதற்கு ஒரு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்திவிட்டார்.
அன்புமணி தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளைச் செய்து வந்தார். நிறைய சொல்ல வேண்டும், ஆனால் ஒன்றிரண்டை மட்டும் கூறுகிறேன்.
தமிழ்க்குமரனை இயக்க வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்க் குமரனை உங்களுக்குத் தெரியும் திரைத் துறையில் இருக்கிறவர். ஜிகே மணியின் பிள்ளை. அவருக்கு இருந்த சினிமா உலகப் புகழும் விளம்பரமும் பொருளாதாரமும் இயக்கத்துக்குப் பயன்பட்டு இயக்கம் வளரும் என்ற முடிவுக்குத் தடையாக இருந்து அதை நிராகரித்தார்.
இதே செயல் தான் முகுந்தனுக்கும் நடந்தது. முகுந்தனுக்கு மேடையிலேயே நடந்தது.
தாயைக் கடவுள் என்று சொல்வீர்கள். இங்கு பொங்கல் சமயத்தில் குடும்பத்தில் உள்ள எல்லோரும் அமர்ந்து முகுந்தன் விஷயத்தைப் பேசினார்கள். அப்போது அம்மா ஏதோ சொன்னார்கள்.. உனது இரண்டாவது மகளை அந்தப் பொறுப்பில் நியமித்திருந்தால் பேசாமல் தானே இருந்திருப்பாய் என்றார். அதற்கு பாட்டிலை தூக்கி அம்மா மீது அடித்தார். நல்வாய்ப்பாக அந்த பாட்டில் அவர் மீது படாமல் சுவற்றில் பட்டது. இதெல்லாம் ஓர் உதாரணம்.
கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டங்களில் யாருடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஏற்பதில்லை. வெளிப்படுத்த வாய்ப்பையும் அளித்ததில்லை. 19 பேரில் ஒருவர் ஏதாவது பேசினால், உடனே பேசக்கூடாது என்கிறார்.
கட்சி தொடங்கியதிலிருந்து நான் என்ன சொல்வேன் என்றால், என்னை விமர்சனம் செய்யுங்கள் தவறு இருந்தால் திருத்திக்கொள்கிறேன் என்பேன். என்னை விமர்சிக்க தயக்கம் இருந்தால், கடிதம் மூலம் எழுதுங்கள் என்பேன். இப்படியெல்லாம் நான் இந்தக் கட்சியை வளர்த்தேன்" என்றார் ராமதாஸ்.
கூட்டணியில் இருந்த முரண் பற்றி ராமதாஸ் கூறியதாவது:
"2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து பேசினோம். அதிமுகவோடு கூட்டணி சேர வேண்டும் என்று இவருக்கு ஒரு கடிதம் எழுதி, இறுதியில் நான்கு வரியில் நீயே எடப்பாடி பழனிசாமியிடம் பேசு என்று கூறியிருந்தேன். இதேபோல எடப்பாடி பழனிசாமியிடம் பேசினார். எடப்பாடி பழனிசாமியும் சி.வி. சண்முகத்திடம் சொல்லி நான் சொல்வதைப்போல செய்துவிடு என்றார்.
ஆனால், அன்று ஒரு நாள் பாஜகவுடன் தான் கூட்டணி என்று அதிமுகவோடு கூட்டணி வேண்டாம் என்றார். அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தால், குறைந்தபட்சம் 3 இடங்கள் வெற்றி பெற்றிருப்போம். அதிமுக 6, 7 இடங்களில் வெற்றி பெற்றிருப்பார்கள். எங்களுக்கும் சின்னம் கிடைத்திருக்கும். அதிமுக, பாமக என்பது இயற்கையான கூட்டணி என்பார்கள்.
இதையெல்லாம் பேசி முடித்த பிறகு, இந்தத் தொடையை அன்புமணி பிடித்துக்கொண்டார். இந்தக் காலை அன்புமணியின் மனைவி பிடித்துக்கொண்டார். இருவரும் பாஜகவுடன் கூட்டணி வேண்டும் என அழுகிறார்கள். ரொம்ப நேரம் அழுகிறார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.
பிறகு, அன்புமணி வாயிலிருந்து உதிர்ந்த முத்துகள் உதிர்ந்தது. இதை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையெனில் நீங்கள் தான் என்னைக் கொள்ளி வைக்க வேண்டும் என்றார். இந்தப் புறம் அன்புமணி காலைப் பிடித்திருக்கிறா, சௌமியா இந்தப் புறம் அழுகிறார். பிறகு வேறு வழியில்லாமல் நிறைய நடந்தது. சரியென்றாகிவிட்டது. பாஜகவுடன் கூட்டணி என்பதற்கான ஏற்பாட்டை சௌமியா செய்துவிட்டார். அண்ணாமலையிடம் பேசி முடிவு செய்துவிட்டார்கள். மறுநாள் காலை பாரத் மாதா கி ஜே என்று கோஷம் கேட்கிறது. அண்ணாமலை காலை வந்துவிட்டது. பெரிய விருந்து நடக்கிறது. இது எனக்குத் தெரியாமலேயே நடக்கிறது. இதில் நிறைய கதை இருக்கிறது. வேட்பாளர் தேர்வு என்று நிறைய கதை இருக்கிறது" என்றார் ராமதாஸ்.