அன்புமணியை தான் சரியாக வளர்க்கவில்லை என ராமதாஸ் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே நீண்ட நாளாகப் பிரச்னை நீடித்து வருகிறது. ராமதாஸ் தரப்பு பாமக மற்றும் அன்புமணி தரப்பு பாமக என இரு தரப்புகளாக கட்சி செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் அன்புமணி தரப்புக்கே உள்ளது.
இந்தப் பிரச்னையின் அடுத்தக்கட்டமாக பாமக செயற்குழுவில் கட்சியின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ராமதாஸ் தரப்பு பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழுவை சேலத்தில் இன்று கூட்டியிருந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பாமக தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மே 29 அன்றுடன் முடிவடைந்துவிட்டதாக முடிவு செய்யப்பட்டது. பாமகவின் தலைவராக ராமதாஸைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் மற்றும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் ராமதாஸ் வசம் வழங்குவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்மையில் ஜி.கே. மணியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அன்புமணி தரப்பு பாமக அறிவித்தது. இந்நிலையில், ராமதாஸ் தரப்பு செயற்குழுவில் பாமகவின் கௌரவத் தலைவராக ஜி.கே. மணி நியமிக்கப்பட்டுள்ளார். செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதியையும் பொதுச்செயலாளராக முரளிசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
புதிய பதவிகள் வழங்கப்பட்டது மட்டுமில்லாமல், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வந்த சௌமியா அன்புமணியை அப்பதவியிலிருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசும்போது ராமதாஸ் கண்ணீர் மல்க உரையாற்றினார்.
"செயற்குழு, பொதுக்குழுவைப் பார்க்கும்போது நூற்றுக்கு 95 சதவீத பாமகவினர் என் பின்னால்தான் இருக்கிறார்கள். அன்புமணி பின்னால் 5 சதவீத மக்கள் கூட இல்லை. ஆனால், லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்து கூட்டம் கூட்டி பம்மாத்து வேலை காட்டுகிறார் அன்புமணி.
அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை. மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் அவர் என்னைக் குத்துகிறார். ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு என்ன செய்வானோ அதைவிட அதிகமாக நான் அவனுக்குச் செய்திருக்கிறேன். என்ன குறை வைத்தேன்? ஒரு குறையும் வைக்கவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலில் நல்ல கூட்டணியை அமைப்பேன். அந்த நல்லக் கூட்டணி வெற்றியைத் தரும். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரையும் தலைவரையும் அழைத்து யாரோடு கூட்டணி வைக்கலாம் என்று கருத்தைக் கேட்டேன். அவர்கள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் கூட்டணி அமைப்பேன். கூட்டணிக்கான நேரம் இன்னும் கனியவில்லை. " என்றார் ராமதாஸ்.
Anbumani Ramadoss | Ramadoss | PMK |