தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக, அதிமுகவினர் வேட்புமனு தாக்கல்

திமுக வேட்பாளர்கள் ஸ்டாலின் முன்னிலையிலும், அதிமுக வேட்பாளர்கள் இபிஎஸ் முன்னிலையிலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்கள்.

கிழக்கு நியூஸ்

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.

தமிழ்நாட்டில் அன்புமணி ராமதாஸ், எம். சண்முகம், என். சந்திரசேகரன், எம். முஹமது அப்துல்லா, பி. வில்சன், வைகோ ஆகியோரது பதவிக் காலம் ஜூலை 24-ல் நிறைவடைகிறது. காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், காலியாகும் 6 இடங்களில் திமுக சார்பில் 4 பேரும் அதிமுக சார்பில் 2 பேரும் மாநிலங்களவைக்குத் தேர்வாக வாய்ப்புள்ளது.

இதன் அடிப்படையில் திமுக சார்பில் பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். மக்களவைத் தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி மாநிலங்களவைத் தேர்தலில் ஓர் இடம் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. அக்கட்சி சார்பில் இரு இடங்களில் ஐ.எஸ். இன்பதுரை, ம. தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

வேட்புமனுவை தாக்கல் செய்ய ஜூன் 9 கடைசி நாள். இந்நிலையில், திமுக வேட்பாளர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் பி. வில்சன், கவிஞர் சல்மா மற்றும் எஸ்.ஆர். சிவலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். பி. வில்சன் வேட்புமனுவை தாக்கல் செய்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உடனிருந்தார்கள்.

கவிஞர் சல்மா வேட்புமனு தாக்கல் செய்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உடனிருந்தார்கள்.

எஸ்.ஆர். சிவலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தபோது விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனிருந்தார்கள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.

திமுக வேட்பாளர்களைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர்கள் ஐ.எஸ். இன்பதுரை, ம. தனபால் ஆகியோரும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள். அதிமுக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடனிருந்தார்கள். வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 9 கடைசி நாள். ஜூன் 10-ல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பாளர்களைத் திரும்பப் பெற ஜூன் 12 கடைசி நாள்.