ரஜினிகாந்த் - கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

வேள்பாரி நாவல் வெற்றி விழா: சிறப்பு விருந்தினராக ரஜினி பங்கேற்பு!

2016-2018 ஆண்டுகளில் ஆனந்த விகடன் இதழில் வெளியான இந்த தொடர், தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ராம் அப்பண்ணசாமி

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் எழுதிய `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் ஒரு லட்சமாவது பிரதி விற்றதைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சங்ககால தமிழக ஆட்சியாளர்களில் மிக முக்கியமானவர் பாரி. பறம்பு மலை என்கிற குறுநில பகுதியை ஆட்சி செய்த பாரி, வேளீர் குலத்தின் தலைவனாக இருந்ததால் வேள்பாரி என்று அழைக்கப்பட்டார். சங்ககால கடை ஏழு வள்ளல்கள் மற்ற அனைவரையும்விட பாரி சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர் என்று பல தமிழ்ப் புலவர்கள் அவரைப் போற்றிப் பாடியுள்ளனர்.

சாகித்ய அகாடமி விருதை வென்ற எழுத்தாளரும், மதுரை எம்.பி.யுமான சு. வெங்கடேசன் பாரியின் வாழ்க்கை வரலாற்றை புனைவுக் கதையாக ஆனந்த விகடன் இதழில், `வீரயுக நாயகன் வேள்பாரி’ என்ற பெயரில் 111 அத்தியாயங்களைக்கொண்ட தொடராக எழுதினார்.

2016-2018 ஆண்டுகளில் வெளியான இந்த தொடர், தமிழ் வாசகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர் நிறைவடைந்த பிறகு, 2 பாகங்களைக்கொண்ட புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிட்டது.

இந்நிலையில், வேள்பாரி புத்தகம் ஒரு லட்சமாவது பிரதி விற்றதைக் கொண்டாடுவதற்காக வரும் ஜூலை 11 மாலை 5.30 அளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேள்பாரி நாவலைப் படமாக்கும் வேலைகளில் இயக்குநர் ஷங்கர் ஈடுபட்டு வருவதாக உறுதிபடுத்தப்படாத தகவல் முன்பு வெளியானது. தற்போது வேள்பாரி நாவலின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ளார். இதனால், ஒரு வேளை வேள்பாரி கதை படமாக உருவாகும் பட்சத்தில், அதில் ரஜினி நடிக்கக்கூடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.