ரஜினி பேச்சு @KauveryHospital
தமிழ்நாடு

தேர்தல் நேரத்தில் மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது: ரஜினி பேச்சு

ஒழுக்கம், நாணயம், ஈடுபாடு, விடாமுயற்சி என இந்த நான்கு விஷயம் யாரிடம் இல்லையோ அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

யோகேஷ் குமார்

சென்னையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை இன்று திறக்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினி, “தேர்தல் நேரத்தில் மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது” என பேசியுள்ளார்.

ரஜினி பேசியதாவது:

“நான் கடந்த 25 ஆண்டுகளாக எந்த கட்டிட திறப்பு விழாக்களிலும் பங்கேற்கவில்லை, ஏனென்றால் உடனே அதில் நானும் ஒரு பார்டனர் என சொல்கிறார்கள். இந்த உடம்பு சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் இருந்து சிங்கப்பூர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை வரை சென்று வந்துள்ளது. எனவே எனக்கு மருத்துவர்கள் மீது மரியாதை அதிகம். எனக்கு ஒரு அறுவை சிகிச்சை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தான் வெற்றிகரமாக நடந்தது.

ஒழுக்கம், நாணயம், ஈடுபாடு, விடாமுயற்சி என இந்த நான்கு விஷயம் யாரிடம் இல்லையோ அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

முன்பெல்லாம் காவேரி மருத்துவமனை எங்குள்ளது? என கேட்டால் கமல் வீட்டிற்கு அருகில் என்பார்கள், தற்போது கமல் வீடு எங்குள்ளது? என கேட்டால் காவேரி மருத்துவமனைக்கு பக்கத்தில் என சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது.

நான் இப்படி பேசியதால், கமல் தவறாக நினைக்க வேண்டாம். ஊடக நண்பர்களும் தவறாக எழுதிவிட வேண்டாம். தேர்தல் நேரத்தில் மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது.

இப்போது யாருக்கு எந்த வயதில் எந்த நோய் வரும் என தெரியவில்லை. காத்து, தண்ணீர், பூமி என எல்லாமே மாசுபட்டுவிட்டது. குழந்தைகளின் மருந்தில் கூட கலப்படம் செய்கிறார்கள். அவர்களை சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும்” என்றார்.