கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி: ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறாரா? | PM Modi

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் தமிழ்நாட்டுப் பயணம்...

கிழக்கு நியூஸ்

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27 அன்று தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27 அன்று ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை விழா நடைபெறுகிறது. ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டத் தொடங்கிய 1,000-வது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற 1000-வது ஆண்டு நிறைவு விழாவும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த விழாவில் ஜூலை 27 அன்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளைத் தலைவர் கோமகன் கோரிக்கையை ஏற்று ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடவுள்ளதாகத் தெரிகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஆடி திருவாதிரை விழா கடந்த 2022 முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவை நிகழாண்டில் 5 நாள்களுக்குக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய கலாசார துறை சார்பில் விழா நடைபெறவுள்ளதால், தமிழ்நாடு அரசு சார்பில் ஜூலை 23 அன்று நடைபெறும் விழா கோயில் வளாகத்தில் நடைபெறவில்லை. மாற்று இடமாக அரசுப் பள்ளி மைதானம் ஒன்றில் தமிழ்நாடு அரசின் விழா நடைபெறுகிறது.

பிரதமர் மோடியின் இந்தத் தமிழ்நாட்டு பயணத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தைத் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் தமிழ்நாட்டுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Rajendra Chozhan | PM Modi | Gangaikonda Chozhapuram | Ariyalur | Narendra Modi