சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு டிச.2 அன்று விடுமுறை  
தமிழ்நாடு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு டிச.2 அன்று விடுமுறை | Rain Alert |

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...

கிழக்கு நியூஸ்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 2 (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஆனாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே மழை பெய்து வந்தாலும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாமல் இருந்ததால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் கனமழை தொடர்கிறது.

இதனிடையே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 2) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த செந்தாமரைக் கண்ணன் காணொளி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“இன்று காலை தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளிலும், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் நிலவிய தாழ்வுப் பகுதி, சென்னைக்கு கிழக்கே 50 கி.மீட்டர் தொலைவில் நிலைபெற்றிருந்தது. இந்தத் தாழ்வுப் பகுதி இன்று மாலை வரை ஆழ்ந்த தாழ்வுப் பகுதியாகவே வடக்கு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு இணையாக வடக்கு திசையில் நகர்ந்து செல்லும். அதன் பின்னர், அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக் கூடும்.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிகக் கன மழையும், ஓரிரு இடங்களில் அதிகன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, டிசம்பர் 2 அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.

Rain holiday has been declared for schools and colleges in Chennai, Tiruvallur and Chengalpattu districts on December 2 (Tuesday) due to the cyclone Titwa.