சென்னையில் நாளை கனமழையும் நாளை மறுநாள் கன முதல் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் இன்று காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாள்களுக்கான மழை எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 17) கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 18 அன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் டிசம்பர் 18 அன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 19-ஐ பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த இருநாள்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் தமிழகக் கடற்கரைப் பகுதி நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.