திருவள்ளூர் ரயில் தீ விபத்து - கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது! | Train Fire Accident

ஜேசிபிகள், கிரேன்கள் ஆகியவற்றின் உதவியுடன் நூற்றுக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ராம் அப்பண்ணசாமி

திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 13 அன்று சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட 4 ரயில் பாதைகளிலும் தற்போது சீரமைப்புப் பணிகள் நிறைவுபெற்று, ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து, 50 டேங்கர்களில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை நிரப்பிக்கொண்டு, கடந்த ஜூலை 13 அன்று அதிகாலை நேரத்தில் வாலாஜாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில், காலை 4.55 மணி அளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அருகே எதிர்பாராவிதமாகத் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தடம்புரண்ட சரக்கு ரயிலின் 18 டேங்கர்களில் தீப்பற்றிக்கொண்டதால், பல அடி உயரத்திற்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை உபயோகித்து தண்ணீர் மற்றும் ரசாயன நுரை ஆகியவற்றை தொடர்ந்து பீய்ச்சியடித்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 11 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் இருந்த 4 ரயில் பாதைகளில், மேல்நிலை மின் கம்பங்கள், தண்டவாளங்கள் உள்ளிட்ட ரயில்வே உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்தது. இதனால் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

தீ அணைக்கப்பட்டு, படிப்படியாக டேங்கர்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு சேதமடைந்த ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கின. ஜேசிபிகள், கிரேன்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த பணியில் நூற்றுக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஒவ்வொரு ரயில் பாதையாக சீரமைக்கப்பட்டு, கடைசி ரயில் பாதையின் சீரமைப்புப் பணி இன்று (ஜூலை 15) அதிகாலை 3 மணிக்கு நிறைவடைந்தாக கூறப்படுகிறது. இதை ஒட்டி, அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் இடையேயான ரயில் சேவை இன்று (ஜூலை 15) இயல்பு நிலைக்கு முழுமையாகத் திரும்பியுள்ளது.