கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு தான் ராகுல் காந்தி விஜயிடம் பேசியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலினோடு மட்டுமில்லாமல் தவெக தலைவர் விஜயைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இச்சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மதியழகன் மட்டும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் சார்பில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வடக்கு மண்டல ஐஜி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கேள்வியெழுப்பினார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பேசுபொருளானது. மறுபுறம் தவெகவிடம் பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அதேசமயம், விஜயிடம் ராகுல் காந்தி பேசியதாக வெளியாகும் தகவல்களைக் கொண்டு விஜயை காங்கிரஸ் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பேசப்படுகின்றன. இந்நிலையில் தான் செல்வப்பெருந்தகை இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
நியூஸ் தமிழ் 24x7 செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
"கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம். காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்துள்ளார். அந்த ஆணையத்தின் அறிக்கை வரட்டும். முதல்வர் ஸ்டாலினும் இதைக் கூர்ந்து கவனித்து பொறுமையாகக் கையாண்டு வருகிறார்.
இதனிடையே, ராகுல் காந்தி பேசியதாகக் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். ராகுல் காந்தி யாரிடம் தான் பேசாமல் இருந்திருக்கிறார். கும்பமேளாவில் துயரம் நடந்தது. அது பாஜக ஆளும் மாநிலம். பாஜக ஆளும் முதல்வரிடம் அவர் பேசினார்.
ராகுல் காந்தி அரசியல் பேசவில்லை. இதுபோன்ற துயரச் சம்பவங்களில் பாஜக ஆளும் முதல்வராக இருந்தாலும் சரி, பாஜக தலைவர்களிடத்திலும் ராகுல் காந்தி அழைத்துப் பேசுவார். துயரச் சம்பவங்களில் கட்சி, அரசியலெல்லாம் பார்ப்பதில்லை. துயரத்தையும் துன்பத்தையும் தான் பார்க்கிறேன். இதில் அரசியலே கிடையாது.
நான் பல முறை விளக்கியிருக்கிறேன். துயரச் சம்பவம் நடந்ததால் ராகுல் காந்தி பேசியிருக்கிறார். முதல்வரிடம் கூறிவிட்டு தான் பேசினார். இதில் அரசியல் கலப்பு எதுவும் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை இண்டியா கூட்டணி உறுதியாக இருக்கிறது" என்றார் செல்வப்பெருந்தகை.
TVK Vijay | Karur Stampede | Rahul Gandhi | Selvaperunthagai | Tamilaga Vettri Kazhagam |