கல்வி தனியார் மயமாகக் கூடாது என்று கூறிய ராகுல் காந்தி, நம் நாட்டில் ஆட்சியாளர்களாலேயே ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று குற்றம்சாட்டினார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தனியார் பள்ளி ஒன்றின் நூற்றாண்டு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவருக்கு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவர்களுடன் பொங்கல் வைத்துக் கொண்டாடினார். அப்போது தோடர் இன மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடினார்.
ஆட்சியாளர்களால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாணவர்களை மேடைக்கு அழைத்து அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் இன்று அரசாங்கத்தில் இருப்பவர்களாலும், அரசாங்கத்தை நடத்துபவர்களாலும் அது தாக்கப்படுகிறது. அவர்கள் நமது தேர்தல் ஆணையத்தைத் தாக்குகிறார்கள். அவர்கள் நமது வெவ்வேறு நிறுவனங்களைத் தாக்குகிறார்கள். அவர்களின் சித்தாந்தத்துடன் உடன்படாதவர்களை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். அதை எதிர்கொள்ள எங்களுக்குக் கேள்வி கேட்க பயப்படாத இளைஞர்கள் தேவை.
கல்வியை தனியார் மயமாக்கக் கூடாது
அதற்குக் கல்வி மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். கல்வி தனியார்மயமாக்கப்படக்கூடாது. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருக்கலாம், ஆனால் நல்ல தரமான அரசாங்கக் கல்விக்கு ஒரு பங்கு உண்டு. அதற்கு, கல்விக்கான பட்ஜெட்டில் அரசாங்கம் பணத்தைச் செலவிட வேண்டும். ஐ.டி புரட்சி, செயற்கை நுண்ணறிவு, தரவு, இந்த வார்த்தைகளை நாம் தினமும் கேட்கிறோம், இது தகவல் யுகம் என்று நாம் கேள்விப்படுகிறோம். தகவல் எளிதில் அணுகக்கூடியதாகவும் இலவசமாகவும் கிடைக்கும் யுகம்.
அறிவார்ந்த குடிமக்கள் ஆக்க வேண்டும்
இது போன்ற ஒரு பள்ளி நிறுவனத்தின் வேலை, தகவல்களைப் பார்க்கவும், தகவல்களை அறிவாக மாற்றவும், இன்னும் முக்கியமாக, ஞானத்துடன் நடந்து கொள்ளவும் கூடிய மக்களை உருவாக்குவதாகும். தகவல் அதிகம் கிடைக்கும் யுகத்தில் நாம் ஞானமின்றி, வெறும் தகவல்களின்பால் மட்டும் ஈர்க்கப்பட்டால் அது இந்த உலகத்தை வாழத் தகுதியற்ற இடமாக மாற்றிவிடும். நமக்குள் போர்கள் மூளும். நம்மை நாம் காயப்படுத்த நேரும். அதனால் இதுபோன்ற பள்ளிகளுக்கு இளம் மாணவர்களை அறிவார்ந்த குடிமக்களாக வளர்க்கும் முக்கிய பொறுப்பிருக்கிறது.” என்றார்.
Rahul Gandhi while speaking among students in Gudalur said that education should not be privatized and accused the rulers of undermining democracy in our country.