கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

ஆட்சி அதிகாரத்தில் பங்கு: கூட்டணிக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை | K. Krishnasamy |

"2026-ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது கட்டாயம். அதுதான் மிக முக்கியமானது."

கிழக்கு நியூஸ்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரக்கூடிய கட்சிகளுடனே கூட்டணி வைக்கப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது டாக்டர் கிருஷ்ணசாமியினுடைய விருப்பத்தையோ அல்லது எங்களுடைய புதிய தமிழகம் கட்சிக்கு அதில் பங்கு வேண்டும் எனும் அடிப்படையில் சொல்லப்பட்டது கிடையாது. தமிழ்நாட்டில் இன்று நான்கில் ஒரு பங்காக இருக்கக் கூடியவர்கள் தேவேந்திர குல வோளர்கள்,வடக்கே வாழக்கூடிய ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் எண்ணற்ற சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளார்கள்.

அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லாமல், இரண்டு கட்சிகள் மட்டுமே கடந்த 60 வருடங்களாக ஆட்சிக்கு வருவதனால், அதிகாரம் குவிகிறதே தவிர அதிகாரம் பரவலாக்கப்படுவதில்லை.

கிராமந்தோறும் சென்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கும் இடங்களில் சாலை வரும். இந்த மக்கள் இருக்கக்கூடிய இடங்களுக்குச் சென்றால் சாலை இருக்காது. அங்கு நல்ல தண்ணீர் வரும். இங்கே நல்ல தண்ணீர் வராது. அவர்களிடத்தில் எல்லா நிலமும் இருக்கும். இவர்கள் கூலிக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள்.

தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் சடங்குக்காக மாலை வைத்து என்ன பிரயோஜனம்? ஏப்ரல் 14 அன்று அம்பேத்கருக்கு ஒரு படத்தை வைத்து மாலை போட்டு என்ன பிரயோஜனம்? அவை வெறும் போலிகளாக உள்ளன.

இந்த நாட்டில் வாழக்கூடிய ஏழை எளிய மக்கள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றால் மட்டும்தான் அந்த மக்கள் தங்களுக்கான பொருளாதார சமத்துவத்தை அடைய முடியும். இல்லையென்றால், அடைய முடியாது. அந்த வகையில இந்த ஏழை எளிய மக்களுடைய குரலாக விளங்கக்கூடிய புதிய தமிழகம் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுகின்ற பொழுது மட்டும்தான் உண்மையான சமத்துவமும் சமநீதியும் சம உரிமையும் கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் இந்த கருத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இது எங்குடைய கொள்கை சார்ந்த விஷயம். இது திராவிடக் கட்சி கொடுக்கிறதா, வேறு கட்சி கொடுக்கிறதா என்பதில் பிரயோஜனம் இல்லை. அவர்கள் கொடுத்தால், அவர்களோடு இருப்போம். இல்லையெனில் அதற்கு உண்டான சூழ்நிலையை உருவாக்கிச் செல்வோம். எனவே, இவர்கள் தான் எனக் கிடையாது. 2026-ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது கட்டாயம். அதுதான் மிக முக்கியமானது.

நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம். ஜனவரி 7, 2026-ல் எங்களுடைய கட்சியின் மாநில மாநாடு வைத்துள்ளோம். மாநாட்டுக்கு முன்பு கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியாது" என்றார் கிருஷ்ணசாமி.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் முழக்கத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ள கட்சி தமிழக வெற்றிக் கழகம் என்பது கவனிக்கத்தக்கது.

Krishnaswamy | Alliance | Power Sharing | Election | Puthiya Tamilagam | K. Krishnasamy |