தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தவெக பொதுக்கூட்டத்தில் புதுச்சேரியில் உள்ளவர்களுக்கே அனுமதி: காவல் கண்காணிப்பாளர் திட்டவட்டம் | TVK Vijay |

நுழைவுச் சீட்டு இருக்கும் தொண்டர்கள் மட்டும் வருகை தந்து ஒழுக்கத்தைக் கடைபிடிக்க கேட்டுக்கொள்கிறேன்...

கிழக்கு நியூஸ்

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை சிறப்பு கண்காணிப்பாளர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி உப்பளம் கடற்கரை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பொதுக்கூட்டம் வரும் டிசம்பர் 9 அன்று நடைபெறுகிறது. முன்னதாக புதுச்சேரியில் சாலைவலம் நிகழ்ச்சி நடத்த அவரது கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை, பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள அறிவுறுத்தியது. அதனடிப்படையில் பொதுக்கூட்டம் நிகழவுள்ளது. இதற்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதற்கிடையில், சாலை வலத்திற்கு அனுமதி மறுத்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்ததற்கு என்ன காரணம் என்று புதுச்சேரி காவல்துறை சிறப்பு கண்காணிப்பாளர் கலைவாணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“மக்கள் அதிகம் வர வாய்ப்புள்ளதாலும், சாலைகள் குறுக்கலாக உள்ளதாலும் சாலை வலம் நிகழ்ச்சிக்குப் பதிலாக பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று நாங்கள் அறிவுரை வழங்கியிருந்தோம். தவெக பொதுக்கூட்டதிற்கு 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கான நுழைவுச் சீட்டுகளை கியூஆர் கோடுடன் கட்சி வழங்க வேண்டும். அந்த நுழைவுச் சீட்டு இருப்பவர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக புதுச்சேரியில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அதனால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் யாரும் பொதுக்கூட்டத்திற்கு அவ்ர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அதனால் அனைத்து தரப்புக்கும் அசௌகர்யம் ஏற்படும். ஏனென்றால் நுழைவுச் சீட்டு இல்லாமல் யாரையும் அனுமதிக்க முடியாது. இதற்காக மூன்று இடங்களில் மட்டும்தான் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. விதிமுறைகளை மக்கள் மீறாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். புதுச்சேரியின் எல்லைப் பகுதிகளிலும் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். நுழைவுச்சீட்டு இல்லாமல் வருபவர்கள் அங்கேயே வெளியேற்றப்படுவார்கள். பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் பள்ளி இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் காவலர்களைப் பணியமர்த்தியுள்ளோம். மொத்தம் 1000 காவலர்களை இதில் பணியமர்த்தியுள்ளோம். தவெக தொண்டர்கள் நுழைவுச்சீட்டு இருப்பவர்கள் மட்டும் வரவேண்டும் என்றும், பாதுகாப்பான முறையில் நிகழ்ச்சியை நடத்த காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து, ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Puducherry SSP Kalaivanan has said that only residents of Puducherry have been allowed to attend the TVK's public meeting to be held in Puducherry on Tuesday.