தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

புதுச்சேரியில் விஜய் சாலை வலம்: அனுமதி வழங்க காவல்துறை மறுப்பு | TVK Vijay |

சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரும் என்பதால் சாலை வலம் செல்ல அனுமதி இல்லை...

கிழக்கு நியூஸ்

புதுச்சேரியில் வரும் டிசம்பர் 5 அன்று அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சாலைவலம் மேற்கொள்ள அனுமதி மறுத்துள்ள காவல்துறை, பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு, பரப்புரை ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன்படி திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். குறிப்பாக கடந்த செப்டம்பர் 27 அன்று அவர் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தார்கள். அச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், விஜய் தனது பிரசாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் சாலை வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், புதுச்சேரியில் வரும் டிசம்பர் 5 அன்று விஜய் சாலைவலம் மேற்கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் அனுமதி கோரி காவல்துறை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது சாலை மார்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக சாலைவலம் வந்து மக்களைச் சந்திக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், விஜயின் சாலை வலம் நிகழ்ச்சிக்கு அனுமதி தரக் கூடாது என்று புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் வைத்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள், புதுச்சேரி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரும் என்பதால் சாலை வலம் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறையினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு டிஐஜி சத்தியசுந்தரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

‘‘புதுச்சேரியில் வரும் டிசம்பர் 5 அன்று விஜய் சாலை வலம் செல்ல அனுமதி இல்லை. திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான இடத்தையும், தேதியையும் அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்’’ என்றார்.

Puducherry Police have which denied permission for TVK Leader Vijay's road show on December 5; granted permission to hold a public meeting.