புதுச்சேரியில் மொத்தம் 9.44 லட்சம் வாக்காளர்கள்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ANI
தமிழ்நாடு

புதுச்சேரியில் மொத்தம் 9.44 லட்சம் வாக்காளர்கள்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு | Puducherry | SIR |

புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 16,619 நீக்கப்பட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன...

கிழக்கு நியூஸ்

புதுச்சேரியில் வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 9.44 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பிஹார் மாநிலத்தைத் தொடர்ந்து நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் 27 தொடங்கிய பணிகள் டிசம்பர் 14 அன்று. அதன்பிறகு பட்டியலில் பெயர் சேர்ப்பு, புதிய வாக்காளர்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல்

முன்னதாக புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 16 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதன்படி 9.18 லட்சம் வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது புதுச்சேரி, காரைக்கால் என மொத்தமுள்ள 30 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 9,44,211 பேர். 4,43,595 ஆண் வாக்காளர்களும், 5,00,477 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 139 திருநர் சமூகத்தவர். புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,227 பேர் இடம் மாற்றம் செய்துள்ளனர். 16,619 நீக்கப்பட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையர் குலோத்துங்கன் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் எப்போது?

இதைப்போல் தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பிப்ரவரி 10 அன்று முடிவடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 27 அன்று தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று, கடந்த ஆண்டு டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 5.43 கோடி பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள், இரட்டைப் பதிவு வாக்காளர்கள் என மொத்தம் 97,37,832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதன்பின் இணையதளம் மூலமாகவும், முகம்கள் மூலமாகவும் 34,75,717 பேர் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பித்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதற்கான பணிகள் பிப்ரவரி 10 அன்று முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 17 அன்று தமிழ்நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Final Electoral Roll – 2026 published for Puducherry. After a comprehensive Special Intensive Revision with 100% field verification, the final electorate stands at 9,44,211 as on 14.02.2026.