பொது அமைதி, மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு போராட்டத்துக்கும் காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என்று திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. இளந்திரையன்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக வரும் பிப்.18-ல் சென்னையில் வேல் யாத்திரை நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியது இந்து முன்னணி அமைப்பு. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
இதைத் தொடர்ந்து, பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் யுவராஜ் சார்பில் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், `முருகப்பெருமானின் மலையான திருப்பரங்குன்றத்தை இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதை எதிர்த்து திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் கோயில் வரை பிப்ரவரி 18-ல் வேல் யாத்திரை நடத்த அனுமதியளிக்க காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்து வந்தார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, `பேரணி நடத்த அனுமதி கோரும் பகுதி போக்குவரத்து நெருக்கடியான இடம் என்பதாலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முஸ்லீம்கள் ஒற்றுமையுடன் இருப்பதாலும் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது’ என்று வாதிட்டார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று (பிப்.14) நடைபெற்றது. விசாரணை நிறைவுற்ற பிறகு நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில்,
`திருப்பரங்குன்றம் மலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை. அப்படி போராட்டம் நடத்தினால், அது மீண்டும் பிற மதத்தினரை தூண்டி பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பொது அமைதி, மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாரையும் செயல்பட அனுமதிக்கக்கூடாது. சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது. கோயிலுக்குச் சென்று வழிபட எந்தவொரு தடையும் இல்லை’ என்றார்.