2025 மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு இடம் ஒதுக்கப்படாதது பற்றி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19 அன்று நடைபெறுகிறது. திமுக மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், காலியாகும் 6 இடங்களில் திமுக சார்பில் 4 பேரும் அதிமுக சார்பில் 2 பேரும் மாநிலங்களவைக்குத் தேர்வாக வாய்ப்புள்ளது. திமுக சார்பில் பி. வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். திமுக சார்பில் மநீமவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓர் இடத்தில் கமல் ஹாசன் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட வேண்டும். இரு இடங்களில் ஓர் இடம் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுவாத அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐ.எஸ். இன்பதுரை, ம. தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
தேமுதிகவுக்கு 2026 மாநிலங்களவைத் தேர்தலில் ஓர் இடம் ஒதுக்கப்படும் என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்தார்.
"இன்று திமுக செயற்குழு, பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுகவுக்கு தேமுதிக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விஜயகாந்த் மறைந்தபோது, முதல்வரும் அமைச்சர்களும் இங்கேயே இருந்து இறுதி மரியாதை செலுத்தி அரசு மரியாதை செலுத்தி எங்களுடன் இருந்து துயரத்தில் பங்கேற்றார்கள். அதை என்று நாங்கள் மறக்க மாட்டோம். அந்த வகையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதை தேமுதிக சார்பில் எங்களுடைய நன்றிகளை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநிலங்களவைத் தேர்தலில் 2026-ல் தேமுதிகவுக்கு இடம் தரப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலின்போதே 5 எம்.பி.க்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடமும் உறுதி செய்யப்பட்ட ஒன்று தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் எல்லோரும் இருந்து 5 எம்.பி.க்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை உறுதி செய்து வாய்வழியாக மட்டுமில்லாமல் எழுத்துபூர்வமாகவும் தந்தது உண்மை தான்.
அறிவிக்க வேண்டிய இடத்தில் அதிமுக இருந்ததால், நாங்கள் இதை இவ்வளவு நாள்களாகக் கூறவில்லை. இது எங்களுக்கான வாய்ப்பு. அன்புமணி, ஜி.கே. வாசன் ஆகியோருக்கு அதிமுக சார்பில் மாநிலங்களவை இடம் தரபப்ட்டது. இம்முறை தேமுதிகவுக்கு என்று ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று தான்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அன்றே இதை ஒப்புக்கொண்டு கடிதம் வாயிலாகக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்கள். எனவே இதை அறிவிக்க வேண்டியது அவர்களுடைய கடமை என்று நான் உறுதியாக இருந்தேன். அவர்களுடைய கடமையை அவர்கள் இன்று ஆற்றியிருக்கிறார்கள்.
2025-க்கு பதில் 2026-ல் மாநிலங்களவை இடம் என்று அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அரசியல் என்பதே தேர்தலை ஒட்டி தான் அரசியல். எனவே, 2026 தேர்தலை ஒட்டி தான் மாநிலங்களவை இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் என்பதே தேர்தலுக்கானது தான். எனவே, அவர்களுடைய கடமையை அவர்கள் ஆற்றியிருக்கிறார்கள். தேமுதிகவும் தேர்தலை ஒட்டி எங்கள் கடமையை நாங்கள் ஆற்றுவோம்.
2024 மக்களவைத் தேர்தலின்போதே அனைவரும் பேசியது இதுதான். எழுதி தரப்பட்டதும் உண்மை தான். அதில் வருடம் குறிப்பிடப்படவில்லை. வருடத்தைக் குறிப்பிட்டு தருமாறு கேட்டுக்கொண்டோம். வருடத்தைக் குறிப்பிட்டு தருவது வழக்கம் இல்லை, உறுதியாக உங்களுக்குத் தருகிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அது 2026 என்று தற்போது அறிவித்திருக்கிறார்கள். தேமுதிகவும் இங்கு நடக்கும் அனைத்து நகர்வுகளையும் தேர்தலை ஒட்டிய அரசியல் நிகழ்வாகவே பார்க்கிறேன். தேமுதிகவும் 2026 ஜனவரி மாதம் 9 அன்று கடலூரில் எங்களுடைய நிலைப்பாடு கூட்டணி, எல்லாவற்றையும் அறிவிப்போம் என்று சொல்லியிருக்கிறோம். தேமுதிகவும் உறுதியாக அரசியலில் தேர்தலை நோக்கி தான் பயணிக்கும்" என்றார் பிரேமலதா விஜயகாந்த்.