தேமுதிக எப்படிப்பட்ட கட்சி, அதை விமர்சித்தவர் எப்படிப்பட்டவர் என்பதை எல்லாம் மக்கள் அறிவார்கள் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன. இதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேசிய திராவிட முன்னேற்ற கழகம் கட்சி இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளது. கூட்டணியில் இணைவது குறித்து அக்கட்சி, திமுகவிடமும் அதிமுகவிடமும் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தேமுதிக குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்தது பேசுபொருளானது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனம்
மதுரை மாவட்டம் மேலூரில் நேற்று (பிப். 11) திமுக சார்பில் ‘தமிழ்நாடு தலைகுணியாது’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
“விஜயகாந்த் இருந்தார். அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அதை மறுக்க முடியாது. இப்போது அவர் கட்சியில் ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ, தேர்தலில் போட்டியிட சீட் கேட்க நினைத்தால் வந்து கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு இரண்டு கட்சிகளுக்கும் சென்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணியில் இணைந்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச வேண்டும். திமுகவா, அதில் இணைந்து தங்களுக்கு வேண்டிய இடங்களைப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு அங்கேயும் பேசுவது இங்கேயும் பேசுவது என்பது நியாமில்லை. விசுவாசமாக இருப்பது என்றால், ஏதாவது ஒரு பக்கத்தில் இணைந்திருக்க வேண்டும். கட்சிக்காரர்கள் பேசிக்கொள்ளலாம். ஆனால், திராவிடர்களுக்கான இயக்கம் என்றால் அது திமுகதான் என்று உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.
தேமுதிக ஒரு கட்சியா?
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேமுதிக குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அதெல்லாம் ஒரு கட்சி என்று பேசுகிறீர்களே, பெரிய கட்சியைப் பற்றி கேளுங்கள்” என்று விமர்சித்தார். இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதற்குப் பதிலளித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் பதில்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சரின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். அவர் கூறியதாவது: “தேமுதிக எப்படிப்பட்ட கட்சி என்பதைத் தமிழ்நாடு மட்டுமன்றி உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் அறிவார்கள். அதைப் பற்றி அவதூறாகச் சொன்னவர் எப்படிப்பட்டவர் என்பதும் மக்களுக்குத் தெரியும். தேமுதிக விஜயகாந்த் உருவாக்கிய கண்ணியமிக்க கட்சி. யாருடைய கருத்தும் எங்களை எந்த வகையிலும் பாதிக்காது. ஏனென்றால் மடியில் கணமில்லை. அதனால் வழியில் எங்களுக்குப் பயமில்லை. அமைச்சர் கருத்து அவருக்கு உட்பட்டது. அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அனைவர் மீதும் மரியாதை வைத்திருக்கிறோம். விஜயகாந்த் எங்களுக்கு வழிகாட்டிய கண்ணியத்துடன்தான் கட்சியை நடத்தி வருகிறோம்” என்றார்.
Premallatha Vijayakant has said regarding Minister Rajakannappan's criticism that people know what kind of party the DMDK is and what kind of person criticized it.