அரசியல் கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும், வீரம் இருக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜயை பிரேமலதா விஜயகாந்த் சரமாரியாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
“இன்றைக்கு சினிமா வசனங்களைப் பேசிவிட்டு, அடுத்த நிமிடம் விமானம் பிடித்து வீட்டுக்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை. இதெல்லாம் என்ன? மக்கள் யாருக்காக வந்தார்கள்? உங்களைப் பார்க்க வந்தார்கள் இல்லையா? அப்படியானால், யார் பொறுப்பு? நிச்சயமாக விஜய் அவர்களைச் சென்று சந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் சென்று சந்திக்க வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். அவர்களுக்கு அறிவித்த பணத்தை நேரடியாகக் கையில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இன்று பல்வேறு விதமான பேச்சுக்களை நாம் பார்த்து வருகிறோம்.
நேரடியாக களத்திற்குச் சென்று மக்களைச் சந்தித்து, அந்தப் பகுதியைப் பார்த்தால், இரு பக்கமும் தவறு உள்ளது. இதுதான் உண்மை. விஜயகாந்த் எப்படி உண்மையைப் பேசுவாரோ, அதேபோல் தேமுதிகவும் உண்மையை மட்டுமே பேசும். யாருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு ஒருபோதும் இல்லை. பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு தனது கடமையில் தவறிவிட்டது. அதைச் சரியாகப் பாதுகாத்து, தொண்டர்களைப் பத்திரமாக அனுப்ப வேண்டிய விஜய் அவர்களும் தவறு செய்திருக்கிறார். இரு பக்கமும் தவறு உள்ளது. இந்த 41 உயிர்களுக்கும் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். விஜயின் தவெக கட்சியும் பொறுப்பேற்க வேண்டும்.
41 உயிர்கள் என்பது சாதாரணமானதா? இன்று விஜய் கைது செய்யப்படுவாரா? ஆனந்த் கைது செய்யப்படுவாரா என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இதில் புஸ்ஸி ஆனந்த் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. கேட்டால் தலைமறைவு என்று சொல்கிறார்கள். ஏன் இப்படி? வெளியில் வாருங்கள், தலைக்குக் கத்தியா வரப்போகிறது? தூக்கில் போட்டுவிடவா போகிறார்களா?
ஒரு கட்சிக்கு தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால், அங்கு முதல் ஆளாக விஜயகாந்த் எப்படி நிற்பாரோ, தேமுதிக எப்படி நிற்குமோ, அப்படி நிற்க வேண்டும்.
கரூர் நிகழ்ச்சியில் இரு பக்கமும் தவறு உள்ளது. ஆட்சியாளர்கள் மீது ஐந்து தவறுகள், விஜய் மீது ஐந்து தவறுகள் சொல்கிறேன்.
தமிழக அரசு செய்த முதல் தவறு, அந்த குறுகலான பாதையில் பேச அனுமதி கொடுத்தது. 100 அடி சாலையில் பாதி சாலையை பேருந்து ஆக்கிரமித்தது. 60 அடி, 40 அடி மட்டுமே இருந்தது.
இரண்டாவது தவறு, ஆம்புலன்ஸை யார் அந்த கூட்டத்தில் அனுமதித்தது? இந்தக் கேள்விக்கு தமிழக அரசு பதில் கூற வேண்டும்.
மூன்றாவது, விஜய் பேசிக் கொண்டிருந்தபோது அவர் மீது செருப்பு, கல் வீசியது யார்? இன்று சிசிடிவி காட்சிகள் எல்லா இடங்களிலும் உள்ளன. அந்த நபர் யார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அவரை கைது செய்தார்களா? அதை உள்ளூர் ரவுடிகள்தான் செய்திருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்களை இயக்கியது யார்? அந்த ஊரில் 10 ரூபாய் அமைச்சர் ஒருவர் இருக்கிறார்.
ஐந்தாவது பிரச்னை, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அங்கு காவல்துறையே இல்லை. இதுதான் உண்மை. அங்கு கூடுதல் காவல் படை வைக்கப்படவில்லை. டிரோன் காட்சிகளில் காவல்துறை பழுப்பு உடை அணிந்து நிற்பதைப் பார்த்தீர்களா? லட்சக்கணக்கான மக்கள் கூடும்போது காவல்துறை ஏன் செயலற்று நின்றது?
விஜய் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவில்லை. இது முதல் தவறு.
இரண்டாவதாக, விஜய், ஏன் அரசு காவல்துறையை நம்புகிறீர்கள்? நான்கு பவுன்சர்களை வைத்து உங்களைச் சுற்றி நிறுத்துகிறீர்கள். உங்களை நம்பி வந்த லட்சக்கணக்கான பெண்கள், ஆண்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்தீர்கள்? 10,000 பேர் சீருடையில் நின்றிருக்க வேண்டாமா? கயிறு கட்டி ஒழுங்குபடுத்திருக்க வேண்டாமா?
மூன்றாவதாக, கரூரில் ஏன் மின்சாரத்தை அணைத்தார்கள்? அவ்வளவு மக்கள் இருக்கும்போது யார் உத்தரவில் மின்சாரம் அணைக்கப்பட்டது? ஜெனரேட்டர் அணைத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், ட்ரோன் காட்சிகளில் அந்த இடம் தவிர சுற்றி முழுவதும் இருட்டு. மின்சாரம் அணைக்கப்பட்டதால்தான் நெரிசல் ஏற்பட்டு, மக்கள் விழுந்தார்கள்.
நான்காவது தவறு, பேருந்துக்குள் சென்று ஒளிந்துகொள்கிறார். ஒரு சிறிய கண்ணாடி வழியாக எட்டிப் பார்க்கிறார். விஜய்! உங்களைப் பார்க்க வந்த மக்களை நேரடியாக சந்திக்க வேண்டாமா? ஒரு மணி நேரம் மக்களைப் பார்த்து கையசைத்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்தி இருக்கலாமே?
விஜய்யை நம்பி வந்த பெண்கள், குழந்தைகள் எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானத்தில் சென்று வீட்டுக்குள் ஒளிந்து, இதுவரை வெளியே வராதது பெரிய தவறு”
இவ்வாறு கூறினார்.