படம்:
தமிழ்நாடு

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ்: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

"நண்பர் என்ற முறையில் அந்த விழாவில் சுதீஷ் கலந்துகொண்டிருக்கிறார்."

கிழக்கு நியூஸ்

காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் கலந்துகொண்டது தொடர்பான கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சி.கே. பெருமாளின் 80-வது பிறந்தநாள் விழா அரசியலில் 60 ஆண்டுகள் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

காங்கிரஸ் தலைவர் மேடையில் திமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் மேடையில் தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷும் அமர்ந்திருந்தது கூட்டணி குறித்த விவாதத்தைத் தொடக்கிவைத்தது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அடுத்தாண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறி வருகிறார். இருந்தாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடனே கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது தேமுதிக. இந்தக் கூட்டணியிலிருந்து விலகிவிட்டதாக தேமுதிக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு ஓர் இடம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகள் இடையே ஒரு மாநிலங்களவை இடம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், மாநிலங்களவைத் தேர்தலில் இரு இடங்களிலும் அதிமுக வேட்பாளர்களே போட்டியிட்டுத் தேர்வாகியுள்ளார்கள். இருந்தபோதிலும், "அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும். 2026-ல் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது அதிமுக, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கும்" என்று அதிமுக விளக்கமளித்தது.

இது தேமுதிக மற்றும் பிரேமலதாவை முழுமையாகத் திருப்திபடுத்தியதாகத் தெரியவில்லை. இந்நிலையில் தான் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது.

இதனிடையே, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்றிருப்பது திமுகவுடனான கூட்டணிக்கான பேச்சுவார்த்தையா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:

"சி.கே. பெருமாள் பல ஆண்டுகளாக சுதீஷின் நண்பர். இதற்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் நண்பர் என்ற முறையில் அவருடைய விழாவில் கலந்துகொள்வதற்கு நேரடியாக வந்து அழைப்பிதழைக் கொடுத்தார். அந்த வகையில் நண்பர் என்ற முறையில் அந்த விழாவில் சுதீஷ் கலந்துகொண்டிருக்கிறார். அதற்கும் கூட்டணிக்கும் கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது" என்றார் அவர்.