தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா 
தமிழ்நாடு

மூப்பனார் நினைவஞ்சலிக் கூட்டத்தில் சுதீஷ்: பிரேமலதா விளக்கம் | Premalatha |

மூப்பனாரின் 24-வது நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஜி.கே. வாசன் அழைப்பு விடுத்தார்.

கிழக்கு நியூஸ்

மூப்பனார் நினைவஞ்சலிக் கூட்டத்தில் சுதீஷ் கலந்துகொண்டதற்கும் கூட்டணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தேமுதிக பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை தேமுதிக இன்னமும் உறுதி செய்யாத நிலையில் இந்நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தென் சென்னை வடக்கு தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டதில் இன்று கலந்துகொண்ட பிரேமலதா, செய்தியாளர்களைச் சந்திப்பில் இதுகுறித்துக் கூறியதாவது:

கேப்டனுக்கும் ஐயா மூப்பனாருக்கும் 40 ஆண்டுக் கால நட்பு இருந்தது. எங்கள் திருமணமே மூப்பனார் மற்றும் கலைஞர் தலைமையில் தான் நடைபெற்றது. மூப்பனார் இல்லாமல் கேப்டனின் படத்துக்குப் பூஜை போட்டதாக வரலாறு கிடையாது. இது எல்லோருக்கும் தெரியும். மூப்பனாரின் நினைவிடத்துக்கு வருடந்தோறும் சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கேப்டன். மூப்பனாரின் 24-வது நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஜி.கே. வாசன் அழைப்பு விடுத்தார். என்னால் கலந்துகொள்ள முடியாத சூழல் இருந்ததால் பொருளாளர் சுதீஷை அனுப்பினேன். நட்புரீதியாகவே அந்நிகழ்வில் கலந்துகொண்டோம். மற்றபடி இதற்கும் கூட்டணிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றார்.