கோப்புப் படம் 
தமிழ்நாடு

ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு

யோகேஷ் குமார்

ஓடும் ரயிலில் இருந்து தவறிவிழுந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து செல்லும் கொல்லம் விரைவு ரயில் நேற்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் நோக்கி சென்றுள்ளது.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது, ரயிலில் பயணம் செய்த கஸ்தூரி என்ற கர்ப்பிணிப் பெண் தவறி விழுந்துள்ளார்.

கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ரயிலில் படிக்கட்டு பகுதிக்கு சென்று வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கமும் ஏற்பட்டு தவறி விழுந்ததாகத் தெரிகிறது.

உடனடியாக அந்த பெண்ணுடன் வந்த உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனால், ரயில் நிற்காமல் சென்றுள்ளது.

இதைத் தொடர்ந்து அருகில் உள்ள பெட்டிக்குச் சென்று அபாய சங்கிலியை இழுத்தனர். இதனால் ரயில் 8 கி.மீ. தூரம் தள்ளி நடுவழியில் நின்றது.

இதைத் தொடர்ந்து ரயிலில் இருந்து இறங்கிய அவரது உறவினர்கள் அந்த பெண்ணை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து விவரம் அறிந்த காவல் துறையினர், விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ மாம்பாக்கத்தில் கஸ்தூரி சடலமாக கிடந்தாகத் தெரிகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.